Get it on Google Play
Download on the App Store

நீர் விளையாட்டுப் படலம்

 

 

←17.  பூக் கொய் படலம்

கம்பராமாயணம்  ஆசிரியர் கம்பர்பாலகாண்டம்

19. உண்டாட்டுப் படலம்→

 

 

 

 

 


907கம்பராமாயணம் — பாலகாண்டம்கம்பர்


18. நீர் விளையாட்டுப் படலம்


மகளிரும் ஆடவரும் புனலாடச் சென்ற காட்சி

 
புனை மலர்த் தடங்கள் நோக்கி, பூசல் வண்டு ஆர்த்துப் பொங்க,
வினை அறு துறக்க நாட்டு விண்ணவர் கணமும் நாண,
அனகரும், அணங்கனாரும், அம் மலர்ச் சோலை நின்று,
வன கரி பிடிகளோடும் வருவன போல வந்தார். 1

அங்கு, அவர், பண்ணை நல் நீராடுவான் அமைந்த தோற்றம்,
கங்கை வார் சடையோன் அன்ன மா முனி கனல, மேல்நாள்,
மங்கையர் கூட்டத்தோடும் வானவர்க்கு இறைவன் செல்வம்,
பொங்கு மா கடலில் செல்லும் தோற்றமே போன்றது அன்றே. 2

மைந்தரும் மாதரும் புனலிடை விளையாடியமை

 
மை அவாம் குவளை எல்லாம், மாதர் கண்மலர்கள் பூத்த;
கை அவாம் உருவத்தார் தம் கண்மலர், குவளை பூத்த;
செய்ய தாமரைகள் எல்லாம், தெரிவையர் முகங்கள் பூத்த;
தையலார் முகங்கள், செய்ய தாமரை பூத்த அன்றே. 3

தாளை ஏய் கமலத்தாளின் மார்பு உறத் தழுவுவாரும்,
தோளையே பற்றி வெற்றித் திரு எனத் தோன்றுவாரும்,
பாளை வீ விரிந்தது என்ன, பரந்து நீர் உந்துவாரும்,
வாளைமீன் உகள, அஞ்சி, மைந்தரைத் தழுவுவாரும்; 4

வண்டு உணக் கமழும் சுண்ணம், வாச நெய் நானத்தோடும்
கொண்டு, எதிர் வீசுவாரும், கோதை கொண்டு ஓச்சுவாரும்,
தொண்டை வாய்ப் பெய்து, தூநீர், கொழுநர் மேல் தூகின்றாரும்,
புண்டரீகக் கை கூப்பி, புனல் முகந்து இறைக்கின்றாரும். 5

மின் ஒத்த இடையினாரும், வேய் ஒத்த தோளினாரும்,
சின்னத்தின் அளக பந்தி திருமுகம் மறைப்ப நீக்கி,
அன்னத்தை, 'வருதி, என்னோடு ஆட' என்று அழைக்கின்றாரும்;
பொன் ஒத்த முலையின் வந்து பூ ஒற்ற, உளைகின்றாரும்; 6

பண் உளர் பவளத் தொண்டை, பங்கயம் பூத்தது அன்ன
வண்ண வாய், குவளை வாட்கண், மருங்கு இலாக் கரும்பின் அன்னார்,
உள் நிறை கயலை நோக்கி, 'ஓடு நீர்த் தடங்கட்கு எல்லாம்
கண் உள ஆம்கொல்?' என்று, கணவரை வினவுவாரும்; 7

தேன் உகு நறவ மாலைச் செறி குழல் தெய்வம் அனனாள்,
தானுடைக் கோல மேனி தடத்திடைத் தோன்ற, நோக்கி,
'நான் நக நகுகின்றாள் இந் நல் நுதல்; தோழி ஆம்' என்று,
ஊனம் இல் விலையின் ஆரம், உளம் குளிர்ந்து உதவுவாரும்; 8

குண்டலம் திரு வில் வீச, குல மணி ஆரம் மின்ன,
விண் தொடர் வரையின் வைகும் மென் மயிற் கணங்கள் போல,
வண்டு உளர் கோதை மாதர் மைந்தர்தம் வயிரத் திண் தோள்
தண்டுகள் தழுவும் ஆசைப் புனற் கரை சார்கின்றாரும்; 9

அங்கு இடை உற்ற குற்றம் யாவது என்று அறிதல் தேற்றாம்;
செங் கயல் அனைய நாட்டம் சிவப்பு உறச் சீறிப் போன
மங்கை, ஓர் கமலச் சூழல் மறைந்தனள்; மறைய, மைந்தன்,
'பங்கயம்', 'முகம்', என்று ஓராது, ஐயுற்றுப் பார்க்கின்றானும்; 10

பொன் - தொடி தளிர்க் கைச் சங்கம் வண்டொடு புலம்பி ஆர்ப்ப,
எற்று நீர் குடையும்தோறும், ஏந்து பேர் அல்குல்நின்றும்
கற்றை மேகலைகள் நீங்கி, சீறடி கவ்வ, 'காலில்
சுற்றிய நாகம்' என்று, துணுக்கத்தால் துடிக்கின்றாரும். 11

குடைந்து நீராடும் மாதர் குழாம் புடைசூழ் ஆழித்
தடம் புயம் பொலிய, ஆண்டு, ஒர் தார் கெழு வேந்தன் நின்றான் -
கடைந்த நாள், அமிழ்தினோடும் கடலிடை வந்து தோன்றும்
மடந்தையர் சூழ நின்ற மந்தரம் போல மாதோ. 12

தொடி உலாம் கமலச் செங் கை, தூ நகை, துவர்த்த செவ் வாய்க்
கொடி உலாம் மருங்குல் நல்லார் குழாத்து, ஒரு குரிசில் நின்றான், -
கடி உலாம் கமல வேலிக் கண் அகன் கான யாற்று,
பிடி எலாம் சூழ நின்ற பெய் மத யானை ஒத்தான். 13

கான மா மயில்கள் எல்லாம் களி கெடக் களிக்கும் சாயல்
சோனை வார் குழலினார்தம் குழாத்து, ஒரு தோன்றல் நின்றான் -
வான யாறு அதனை நண்ணி, வயின் வயின் வயங்கித் தோன்றும்
மீன் எலாம் சூழ நின்ற விரி கதிர்த் திங்கள் ஒத்தான். 14

மேவலாம் தகைமைத்து அல்லால், வேழ வில் தடக் கை வீரற்கு
ஏ எலாம் காட்டுகின்ற இணை நெடுங் கண் ஒர் ஏழை,
பாவைமார் பரந்த கோலப் பண்ணையில் பொலிவாள், வண்ணப்
பூ எலாம் மலர்ந்த பொய்கைத் தாமரை பொலிவது ஒத்தாள். 15

மிடலுடைக் கொடிய வேலே என்னலாய் மிளிர்வது என்ன,
சுடர் முகத்து உலவு கண்ணாள், தோகையர் சூழ நின்றாள்;
மடலுடைப் போது காட்டும் வளர் கொடி பலவும் சூழ,
கடலிடைத் தோன்றும் மென் பூங் கற்பக வல்லி ஒத்தாள். 16

தேரிடைக் கொண்ட அல்குல், தெங்கிடைக் கொண்ட கொங்கை,
ஆரிடைச் சென்றும் கொள்ள ஒண்கிலா அழகு கொண்டாள்,
வாரிடைத் தனம் மீது ஆட மூழ்கினாள்; வதனம், மை தீர்
நீரிடைத் தோன்றும் திங்கள் நிழல் என, பொலிந்தது அன்றே! 17

நீராடிய பொய்கையும், பூம்புனலும்

 
மலை கடந்த புயங்கள், மடந்தைமார்,
கலை கடந்து அகல் அல்குல், கடம் படு
முலைகள், தம்தமின் முந்தி நெருங்கலால்,
நிலை கடந்து பரந்தது, நீத்தமே. 18

செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,
மெய் அராகம் அழிய, துகில் நெக,
தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,
பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே! 19

ஆன தூயவரோடு உடன் ஆடினார்
ஞான நீரவர் ஆகுதல் நன்று அரோ! -
தேனும், நாவியும், தேக்கு, அகில் ஆவியும்,
மீனும், நாறின; வேறு இனி வேண்டுமோ? 20

மிக்க வேந்தர்தம் மெய் அணி சாந்தொடும்
புக்க மங்கையர் குங்குமம் போர்த்தலால்,
ஒக்க, நீல முகில் தலை ஓடிய 
செக்கர் வானகம் ஒத்தது அம் தீம் புனல். 21

காக துண்ட நறுங் கலவைக் களி,
ஆகம் உண்டது, அடங்கலும் நீங்கலால்,
பாகு அடர்ந்த பனிக் கனி வாய்ச்சியர்,
வேகடம் செய் மணி என, மின்னினார். 22

பாய் அரித் திறலான் பசுஞ் சாந்தினால்
தூய பொன் - புயத்துப் பொதி தூக் குறி
மீ அரித்து விளர்க்க ஓர் மெல்லியல்
சேயரிக் கருங் கண்கள் சிவந்தவே. 23

கதம்ப நாள் விரை, கள் அவிழ் தாதொடும்
ததும்பு; பூந் திரைத் தண் புனல் சுட்டதால் -
நிதம்ப பாரத்து ஒர் நேரிழை, காமத்தால்
வெதும்புவாள் உடல், வெப்பம் வெதுப்பவே! 24

தையலாளை ஒர் தார் அணி தோளினான்,
நெய் கொள் ஓதியின் நீர் முகந்து எற்றினான் -
செய்ய தாமரைச் செல்வியை, தீம் புனல்,
கையின் ஆட்டும் களிற்று அரசு என்னவே! 25

சுளியும் மென் நடை தோற்க நடந்தவர்
ஒளி கொள் சீறடி ஒத்தன ஆம் என,
விளிவு தோன்ற, மிதிப்பன போன்றன - 
நளினம் ஏறிய நாகு இள அன்னமே. 26

ஆடவரின் அடங்கா வேட்கை

 
எரிந்த சிந்தையர், எத்தனை என்கெனோ?
அரிந்த கூர் உகிரால் அழி சாந்து போய்,
தெரிந்த கொங்கைகள், செவ்விய நூல் புடை
வரிந்த பொற் கலசங்களை மானவே! 27

தாழ நின்ற ததை மலர்க் கையினால்,
ஆழி மன் ஒருவன் உரைத்தான்; அது,
வீழியின் கனிவாய் ஒரு மெல்லியல்,
தோழி கண்ணில், கடைக்கணிற் சொல்லினாள். 28

தள்ளி ஓடி அலை தடுமாறலால்,
தெள்ளு நீரிடை மூழ்கு செந்தாமரை
புள்ளி மான் அனையார் முகம் போல்கிலாது,
உள்ளம் நாணி, ஒளிப்பன போன்றவே. 29

நீராடிக் கரையேறி ஆடை ஆபரணங்கள் அணிதல்

 
இனைய எய்தி இரும் புனல் ஆடிய,
வனை கருங் கழல் மைந்தரும், மாதரும்,
அனைய நீர் வறிது ஆக வந்து ஏறியே,
புனை நறுந் துகில், பூணொடும் தாங்கினார். 30

மேவினார் பிரிந்தார்; அந்த வீங்கு நீர்,
தாவு தண் மதிதன்னொடும் தாரகை
ஓவு வானமும், உள் நிறை தாமரைப்
பூ எலாம் குடி போனதும், போன்றதே. 31

சூரியனின் மறைவும், சந்திரனின் தோற்றமும்

 
மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய
ஆன நீர் விளையாடலை நோக்கினான்;
தானும், அன்னது காதலித்தான் என,
மீன வேலையை, வெய்யவன் எய்தினான். 32

ஆற்றல் இன்மையினால் அழிந்தேயும், தம்
வேற்று மன்னர் தம்மேல் வரும் வேந்தர் போல்,
ஏற்று மாதர் முகங்களொடு எங்கணும்
தோற்ற சந்திரன், மீளவும் தோற்றினான். 33

 

 


 

கம்பராமாயணம்

Tamil Editor
Chapters
கம்பராமாயணம் (ராமாவதாரம்) ஆற்றுப் படலம் நாட்டுப் படலம் நகரப் படலம் அரசியற் படலம் திரு அவதாரப் படலம் கையடைப் படலம் தாடகை வதைப் படலம் வேள்விப் படலம் அகலிகைப் படலம் மிதிலைக் காட்சிப் படலம் கைக்கிளைப் படலம் வரலாற்றுப் படலம் கார்முகப் படலம் எழுச்சிப் படலம் சந்திரசயிலப் படலம் வரைக்காட்சிப் படலம் பூக் கொய் படலம் நீர் விளையாட்டுப் படலம் உண்டாட்டுப் படலம் எதிர்கொள் படலம் உலாவியற் படலம் கோலம் காண் படலம் கடிமணப் படலம் பரசுராமப் படலம் மந்திரப் படலம் மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்ச்சிப் படலம் நகர் நீங்கு படலம் தைலம் ஆட்டு படலம் கங்கைப் படலம் குகப் படலம் வனம் புகு படலம்