Get it on Google Play
Download on the App Store

ஆற்றுப் படலம்

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண் எனும்
பூசலம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம். 1

நீற ணிந்த கடவுள் நிறத்தவான்
ஆற ணிந்து சென் றார்கலி மேய்ந்தகில்
சேற ணிந்த முலைத் திரு மங்கைதன்
வீற ணிந்தவன் மேனியின் மீண்டதே. 2

பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே. 3

புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்
உள்ளி யுள்ள எலாமுவந்து ஈயும்அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே. 4

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனுநெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே. 5

தலையும் ஆகமும் தாளும் தழீஇயதன்
நிலைநி லாதிறை நின்றது போலவே
மலையின் உள்ள எ லாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்ததுஅவ் வெள்ளமே. 6

மணியும் பொன்னும் மயில் தழைப்பீலியும்
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்ததுஅவ் வாரியே. 7

பூ நிரைத்து மென் தாது பொருந்தியும்
தேன ளாவியும் செம்பொன் விராவியும்
ஆனை மாமத வாற்றொடு அளாவியும்
வான வில்லை நிகர்த்ததுஅவ் வாரியே. 8

மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலை கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்அந் நீத்தமே. 9

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து
ஊக்க மேமிகுந்து உள்தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின்தீம் புனல்
வாக்கும் தேன்நுகர் மாக்களை மானுமே. 10

பணை முகக் களி யானை பல் மாக்களோடு
அணி வகுத்தென ஈர்த்து இரைத்து ஆர்த்தலின்
மணி உடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்
புணரிமேல் பொரப் போவதும் போன்றதே. 11

இரவி தன்குலத்து எண்ணிப்பல் வேந்தர்தம்
புரவு நல்லொழுக் கின்படி பூண்டது
சரயு என்பது தாய்முலை யன்னது இவ்
உரவு நீர்நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம். 12

கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம்
நடுக்குறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய்
அடுக்கலின் அளிந்த செந் தேன் அகிலொடு நாறும் அன்றே. 13

எயினர்வாழ் சீறூர் அப்பு மாரியின் இரியல் போக்கி
வயின்வயின் எயிற்றி மாதர் வயிறலைத்து ஒட ஓட்டி
அயின்முகக் கணையும் வில்லும் வாரிகொண்டு அலைக்கும் நீரால்
செயிர் தருங் கொற்ற மன்னர் சேனையை மானும் அன்றே. 14

செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்
உறியோடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே. 15

கதவினை முட்டி மள்ளர் கையெடுத்து ஆர்ப்ப எய்தி
நுதலணி ஓடை பொங்க நுகர்வரி வண்டு கிண்டத்
ததைமணி சிந்த உந்தித் தறியிறத் தடக்கை சாய்த்து
மத மழை யானை என்ன மருதம் சென்று அடைந்தது அன்றே. 16

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே. 17

காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப்பறை கறங்கக் கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி
நீத்த மாந்தலைய தாகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்த தன்றே. 18

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே. 19

தாதுகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்
போத விழ் பொய்கைதோறும் புதுமணத்தடங்கள்தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர்என உலாய தன்றே. 20

கம்பராமாயணம்

Tamil Editor
Chapters
கம்பராமாயணம் (ராமாவதாரம்) ஆற்றுப் படலம் நாட்டுப் படலம் நகரப் படலம் அரசியற் படலம் திரு அவதாரப் படலம் கையடைப் படலம் தாடகை வதைப் படலம் வேள்விப் படலம் அகலிகைப் படலம் மிதிலைக் காட்சிப் படலம் கைக்கிளைப் படலம் வரலாற்றுப் படலம் கார்முகப் படலம் எழுச்சிப் படலம் சந்திரசயிலப் படலம் வரைக்காட்சிப் படலம் பூக் கொய் படலம் நீர் விளையாட்டுப் படலம் உண்டாட்டுப் படலம் எதிர்கொள் படலம் உலாவியற் படலம் கோலம் காண் படலம் கடிமணப் படலம் பரசுராமப் படலம் மந்திரப் படலம் மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்ச்சிப் படலம் நகர் நீங்கு படலம் தைலம் ஆட்டு படலம் கங்கைப் படலம் குகப் படலம் வனம் புகு படலம்