Get it on Google Play
Download on the App Store

கைக்கிளைப் படலம்

 

 

←10. மிதிலைக் காட்சிப் படலம்

கம்பராமாயணம்  ஆசிரியர் கம்பர்பாலகாண்டம்

12. வரலாற்றுப் படலம்→

 

 

 

 

 


900கம்பராமாயணம் — பாலகாண்டம்கம்பர்


11. கைக்கிளைப் படலம்


சனகன் எதிர்கொள்ள மூவரும் சென்று, ஓர் மாளிகையில் தங்குதல் 
 
ஏகி, மன்னனைக் கண்டு, எதிர் கொண்டு அவன்
ஓகையோடும் இனிது கொண்டு உய்த்திட,
போக பூமியில் பொன்னகர் அன்னது ஓர்
மாக மாடத்து, அனைவரும் வைகினார். 1

சதானந்த முனிவர் அவ்விடம் வந்து முகமன் உரைத்தல் 
 
வைகும் அவ் வழி, மா தவம் யாவும் ஓர்
செய்கை கொண்டு நடந்தென, தீது அறு
மொய் கொள் வீரன் முளரி அம் தாளினால்
மெய் கொள் மங்கை அருள் முனி மேவினான். 2

வந்து எதிர்ந்த முனிவனை வள்ளலும்
சிந்தை ஆர வணங்கலும், சென்று எதிர்,
அந்தம் இல் குணத்தான் நெடிது ஆசிகள்
தந்து, கோசிகன் தன் மருங்கு எய்தினான். 3

கோதமன் தரு கோ முனி கோசிக
மாதவன் தனை மா முகம் நோக்கி, 'இப்
போது நீ இவண் போத, இப் பூதலம்
ஏது செய்த தவம்?' என்று இயம்பினான். 4

இடர் முடித்தான் இவ் இளவல் என விசுவாமித்திரன் மொழிதல் 
 
பூந் தண் சேக்கைப் புனிதனையே பொரு
ஏய்ந்த கேண்மைச் சதானந்தன் என்று உரை
வாய்ந்த மா தவன் மா முகம் நோக்கி, நூல்
தோய்ந்த சிந்தைக் கௌசிகன் சொல்லுவான்: 5

'வடித்த மாதவ! கேட்டி இவ் வள்ளல்தான்
இடித்த வெங் குரல் தாடகை யாக்கையும்,
அடுத்து என் வேள்வியும், நின் அன்னை சாபமும்,
முடித்து, என் நெஞ்சத்து இடர் முடித்தான்' என்றான். 6

 'உன் அருள் இருக்கும் போது எய்த முடியாததும் உளதோ?' என சதானந்த முனிவர் வினவுதல் 
 
என்று கோசிகன் கூறிட, ஈறு இலா
வன் தபோதனன், 'மா தவ! நின் அருள் 
இன்றுதான் உளதேல், அரிது யாது, இந்த
வென்றி வீரர்க்கு?' எனவும் விளம்பி, மேல், 7

சதானந்தர் இராம இலக்குவருக்கு விசுவாமித்திரர் வரலாறு உரைத்தல் 
 
எள் இல் பூவையும், இந்திர நீலமும்,
அள்ளல் வேலையும், அம்புத சாலமும்,
விள்ளும் வீயுடைப் பானலும், மேவும் மெய்
வள்ளல்தன்னை மதிமுகம் நோக்கியே, 8

'நறு மலர்த் தொடை நாயக! நான் உனக்கு
அறிவுறுத்துவென், கேள்: இவ் அருந் தவன்
இறை எனப் புவிக்கு ஈறு இல் பல் ஆண்டு எலாம்
முறையினின் புரந்தே அருள் முற்றினான். 9

'அரசின் வைகி அறனின் அமைந்துழி,
விரசு கானிடைச் சென்றனன், வேட்டைமேல்;
உரைசெய் மா தவத்து ஓங்கல் வசிட்டனைப்
பரசுவான் அவன்பால் அணைந்தான் அரோ. 10

அருந்ததி கணவன் வேந்தற்கு அருங் கடன் முறையின் ஆற்றி,
"இருந்தருள் தருதி" என்ன, இருந்துழி, "இனிது நிற்கு
விருந்து இனிது அமைப்பென்" என்னா, சுரபியை விளித்து, "நீயே
சுரந்தருள் அமிர்தம்" என்ன, அருள்முறை சுரந்தது அன்றே. 11

'"அறு சுவைத்து ஆய உண்டி, அரச! நின் அனிகத்தோடும்
பெறுக!" என அளித்து, வேந்தோடு யாவரும் துய்த்த பின்றை,
நறு மலர்த் தாரும் வாசக் கலவையும் நல்கலோடும்,
உறு துயர் தணிந்து, மன்னன் உய்த்து உணர்ந்து உரைக்கலுற்றான்: 12

'மாதவ! எழுந்திலாய், நீ; வயப்புடைப் படைகட்கு எல்லாம்
கோது அறும் அமுதம் இக்கோ உதவிய கொள்கைதன்னால்,
தீது அறு குணத்தால் மிக்க செழு மறை தெரிந்த நூலோர்,
'மே தகு பொருள்கள் யாவும் வேந்தருக்கு' என்கைதன்னால், 13

'"நிற்கு இது தருவது அன்றால், நீடு அருஞ் சுரபிதன்னை
எற்கு அருள்" என்றலோடும், இயம்பலன் யாதும், பின்னர்,
"வற்கலை உடையென் யானோ வழங்கலென்; வருவது ஆகின்,
கொற் கொள் வேல் உழவ! நீயே கொண்டு அகல்க!" என்று கூற, 14

'"பணித்தது புரிவென்" என்னா, பார்த்திபன் எழுந்து, பொங்கி,
பிணித்தனன் சுரபிதன்னை; பெயர்வுழி, பிணியை வீட்டி,
"மணித் தடந் தோளினாற்குக் கொடுத்தியோ, மறைகள் யாவும்
கணித்த எம் பெரும்?" என்ன, கலை மறை முனிவன் சொல்வான்: 15

'"கொடுத்திலென், யானே; மற்று இக் குடைகெழு வேந்தந்தானே
பிடித்து அகல்வுற்றது" என்ன, பெருஞ் சினம் கதுவும் நெஞ்சோடு,
"இடித்து எழு முரச வேந்தன் சேனையை யானே இன்று
முடிக்குவென், காண்டி" என்னா, மொய்ம் மயிர் சிலிர்த்தது அன்றே. 16

'பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்
கைப்படை அதனினோடும் கபிலைமாட்டு உதித்து, வேந்தன்
துப்புடைச் சேனை யாவும் தொலைவுறத் துணித்தலோடும்,
வெப்புடைக் கொடிய மன்னன் தனயர்கள் வெகுண்டு மிக்கார். 17

'"சுரபிதன் வலி இது அன்றால்; சுருதி நூல் உணர வல்ல
வர முனி வஞ்சம்" என்னா, "மற்று அவன் சிரத்தை இன்னே
அரிகுதும்" என்னப் பொங்கி, அடர்த்தனர்; அடர, அன்னான்
எரி எழ விழித்தலோடும், இறந்தனர் குமரர் எல்லாம். 18

'ஐ-இருபதின்மர் மைந்தர் அவிந்தமை அரசன் காணா,
நெய் பொழி கனலின் பொங்கி, நெடுங் கொடித் தேர் கடாவி,
கை தொடர் கணையினோடும் கார்முகம் வளைய வாங்கி,
எய்தனன்; முனியும், தன கைத் தண்டினை, "எதிர்க" என்றான். 19

'கடவுளர் படைகள் ஈறாக் கற்றன படைகள் யாவும்
விட விட, முனிவன் தண்டம் விழுங்கி மேல் விளங்கல் காணா,
வடவரைவில்லி தன்னை வணங்கினன் வழுத்தலோடும், 
அடல் உறு படை ஒன்று ஈயா, அன்னவன் அகன்றான் அன்றே. 20

'விட்டனன் படையை வேந்தன்; விண்ணுளோர், "உலகை எல்லாம்
சுட்டனன்" என்ன, அஞ்சித் துளங்கினர்; முனியும் தோன்றி,
கிட்டிய படையை உண்டு கிளர்ந்தனன், கிளரும் மேனி
முட்ட வெம் பொறிகள் சிந்த; பொரு படை முரணது இற்றே. 21

'கண்டனன் அரசன்; காணா, "கலை மறை முனிவர்க்கு அல்லால்,
திண் திறல் வலியும் தேசும் உள எனல் சீரிது அன்றால்; 
மண்டலம் முழுதும் காக்கும் மொய்ம்பு ஒரு வலன் அன்று" என்னா,
ஒண் தவம் புரிய எண்ணி, உம்பர்கோன் திசையை உற்றான். 22

'மாண்ட மா தவத்தோன் செய்த வலனையே மனத்தின் எண்ணி,
பூண்ட மா தவத்தன் ஆகி அரசர்கோன் பொலியும் நீர்மை
காண்டலும், அமரர் வேந்தன் துணுக்குறு கருத்தினோடும்
தூண்டினன், அரம்பைமாருள் திலோத்தமை எனும் சொல் மானை. 23

'அன்னவள் மேனி காணா, அனங்க வேள் சரங்கள் பாய,
தன் உணர்வு அழிந்து காதற் சலதியின் அழுந்தி, வேந்தன்,
பன்ன அரும் பகல் தீர்வுற்று, பரிணிதர் தெரித்த நூலின்
நல் நயம் உணர்ந்தோன் ஆகி, நஞ்சு எனக் கனன்று, நக்கான். 24

'"விண் முழுது ஆளி செய்த வினை" என வெகுண்டு, "நீ போய்,
மண்மகள் ஆதி" என்று, மடவரல் தன்னை ஏவி,
கண் மலர் சிவப்ப, உள்ளம் கறுப்புறக் கடிதின் ஏகி,
எண்மரின் வலியன் ஆய யமன் திசை தன்னை உற்றான். 25

'தென் திசை அதனை நண்ணிச் செய் தவம் செய்யும் செவ்வி,
வன் திறல் அயோத்தி வாழும் மன்னவன் திரிசங்கு என்பான்
தன் துணைக் குருவை நண்ணி, "தனுவொடும் துறக்கம் எய்த
இன்று எனக்கு அருளுக!" என்ன, "யான் அறிந்திலென் அது" என்றான். 26

"நினக்கு ஒலாது ஆகின், ஐய! நீள் நிலத்து யாவரேனும்
மனக்கு இனியாரை நாடி, வகுப்பல் யான், வேள்வி" என்ன,
"சினக் கொடுந் திறலோய்! முன்னர்த் தேசிகற் பிழைத்து, வேறு ஓர்
நினக்கு இதன் நாடி நின்றாய்; நீசன் ஆய் விடுதி" என்றான். 27

'மலர் உளோன் மைந்தன்-மைந்த!- வழங்கிய சாபம் தன்னால்
அலரியோன் தானும் நாணும் வடிவு இழந்து, அரசர் கோமான்,
புலரி அம் கமலம்போலும் பொலிவு ஒரீஇ, வதனம், பூவில்
பலரும் ஆங்கு இகழ்தற்கு ஒத்த படிவம் வந்துற்றது அன்றே. 28

'காசொடு முடியும் பூணும் கரியதாம் கனகம் போன்றும்,
தூசொடும் அணியும் முந்நூல் தோல் தரும் தோற்றம் போன்றும்,
மாசொடு கருகி, மேனி வனப்பு அழிந்திட, ஊர் வந்தான்;
"சீசி" என்று யாரும் எள்ள, திகைப்பொடு பழுவம் சேர்ந்தான். 29

'கானிடைச் சிறிது வைகல் கழித்து, ஒர் நாள், கௌசிகப் பேர்க்
கோன் இனிது உறையும் சோலை குறுகினன்; குறுக, அன்னான்,
"ஈனன் நீ யாவன்? என்னை நேர்ந்தது. இவ் இடையில்?" என்ன,
மேல் நிகழ் பொருள்கள் எல்லாம் விளம்பினன், வணங்கி, வேந்தன். 30

'"இற்றதோ?" என நக்கு, அன்னான், "யான் இரு வேள்வி முற்றி,
மற்று உலகு அளிப்பென்" என்னா, மா தவர்தம்மைக் கூவ,
சுற்றுறு முனிவர் யாரும் தொக்கனர்; வசிட்டன் மைந்தர்,
"சுற்றிலம், அரசன் வேள்வி கனல் துறை புலையற்கு ஈவான்." 31

'என்று உரைத்து, "யாங்கள் ஒல்லோம்" என்றனர்; என்னப் பொங்கி,
"புன் தொழில் கிராதர் ஆகிப் போக" எனப் புகறலோடும்,
அன்று அவர் எயினர் ஆகி, அடவிகள் தோறும் சென்றார்;
நின்று வேள்வியையும் முற்றி, 'நிராசனர் வருக!' என்றான். 32

'"அரைசன் இப் புலையற்கு என்னே அனல்துறை முற்றி, எம்மை
விரைசுக வல்லை என்பான்! விழுமிது!" என்று இகழ்ந்து நக்கார்,
புரைசை மா களிற்று வேந்தை, "போக நீ துறக்கம்; யானே
உரைசெய்தேன், தவத்தின்" என்ன, ஓங்கினன் விமானத்து உம்பர். 33

'ஆங்கு அவன் துறக்கம் எய்த, அமரர்கள் வெகுண்டு, "நீசன்
ஈங்கு வந்திடுவது என்னே? இரு நிலத்து இழிக!" என்ன,
தாங்கல் இல்லாது வீழ்வான், "தாபதா! சரணம்" என்ன,
ஓங்கினன், "நில் நில்!" என்ன உரைத்து, உரும் ஒக்க நக்கான். 34

'"பேணலாது இகழ்ந்த விண்ணோர் பெரும் பதம் முதலா மற்றைச்
சேண் முழுது அமைப்பல்" என்னா, "செழுங் கதிர், கோள், நாள், திங்கள்,
மாண் ஒளி கெடாது, தெற்கு வடக்கவாய் வருக!" என்று,
"தாணுவோடு ஊர்வ எல்லாம் சமைக்குவென்" என்னும் வேலை. 35

'நறைத் தரு உடைய கோனும், நான்முகக் கடவுள் தானும்,
கறைத் தரு களனும், மற்றைக் கடவுளர் பிறரும், தொக்கு,
"பொறுத்தருள், முனிவ! நின்னைப் புகல் புகுந்தவனைப் போற்றும்
அறத் திறன் நன்று; தாரா கணத்தொடும் அமைக, அன்னான். 36

'"அரச மா தவன் நீ ஆதி; ஐந்து நாள் தென்பால் வந்து, உன்
புரை விளங்கிடுக!" என்னா, கடவுளர் போய பின்னர்,
நிரை தவன் விரைவின் ஏகி, நெடுங் கடற்கு இறைவன் வைகும்
உரவு இடம் அதனை நண்ணி, உறு தவம் உஞற்றும் காலை, 37

'குதை வரி சிலை வாள் தானைக் கோமகன் அம்பரீடன்,
சுதை தரு மொழியன், வையத்து உயிர்க்கு உயிர் ஆய தோன்றல்,
வதை புரி புருட மேதம் வகுப்ப ஓர் மைந்தற் கொள்வான்,
சிதைவு இலன், கனகம் தேர் கொண்டு, அடவிகள் துருவிச் சென்றான். 38

'நல் தவ ரிசிகன் வைகும் நனை வரும் பழுவம் நண்ணி,
கொற்றவன் வினவலோடும், இசைந்தனர்; குமரர்தம்முள்
பெற்றவள், "இளவல் எற்கே" என்றனள்; பிதா, "முன்" என்றான்;
மற்றைய மைந்தன் நக்கு, மன்னவன் தன்னை நோக்கி, 39

'"கொடுத்தருள் வெறுக்கை வேண்டிற்று, ஒற்கம் ஆம் விழுமம் குன்ற,
எடுத்து எனை வளர்த்த தாதைக்கு" என்று அவன் - தொழுது வேந்தன்
தடுப்ப அருந் தேரின் ஏறி, தடை இலாப் படர் தலோடும்,
சுடர்க் கதிர்க் கடவுள் வானத்து உச்சி அம் சூழல் புக்கான். 40

'அவ் வயின் இழிந்து வேந்தன் அருங் கடன் முறையின் ஆற்ற,
செவ்விய குரிசில்தானும் சென்றனன், நியமம் செய்வான்;
அவ்வியம் அவித்த சிந்தை முனிவனை ஆண்டுக் காணா,
கவ்வையினோடும் பாத கமலம் அது உச்சி சேர்ந்தான். 41

'விறப்பொடு வணக்கம் செய்த விடலையை இனிது நோக்கி,
சிறப்புடை முனிவன், "என்னே தெருமரல்? செப்புக!" என்ன,
"அறப் பொருள் உணர்ந்தோய்! என் தன் அன்னையும் அத்தன் தானும்,
உறப் பொருள் கொண்டு, வேந்தற்கு உதவினர்" என்றான், உற்றோன். 42

'மைத்துனனோடு முன்னோள் வழங்கிய முறைமை கேளா,
"தத்துறல் ஒழி நீ; யானே தடுப்பென், நின் உயிரை" என்னா,
புத்திரர் தம்மை நோக்கி, "போக வேந்தோடும்" என்ன,
அத் தகு முனிவன் கூற, அவர் மறுத்து அகறல் காணா, 43

'எழும் கதிரவனும் நாணச் சிவந்தனன் இரு கண்; நெஞ்சம்
புழுங்கினன்; வடவை தீய மயிர்ப்புறம் பொறியின் துள்ள,
அழுங்க இல் சிந்தையீர்! நீர் அடவிகள்தோறும் சென்றே,
ஒழுங்கு அறு புளிஞர் ஆகி, உறு துயர் உறுக!' என்றான். 44

'மா முனி வெகுளி தன்னால் மடிகலா மைந்தர் நால்வர்
தாம் உறு சவரர் ஆகச் சபித்து, எதிர், "சலித்த சிந்தை
ஏமுறல் ஒழிக! இன்னே பெறுக!" என இரண்டு விஞ்சை
கோ மருகனுக்கு நல்கி, பின்னரும் குணிக்கலுற்றான்: 45

'"அரசனோடு ஏகி யூபத்து அணைக்குபு இம் மறையை ஓதின்,
விரசுவர் விண்ணுளோரும் விரிஞ்சனும் விடைவலோனும்;
உரை செறி வேள்வி முற்றும்; உனது உயிர்க்கு ஈறு உண்டாகா;
பிரச மென் தாரோய்!" என்ன, பழிச்சொடும் பெயர்ந்து போனான். 46

'மறை முனி உரைத்த வண்ணம் மகத்து உறை மைந்தன் ஆய,
சிறை உறு கலுழன், அன்னம், சே, முதல் பிறவும் ஊரும்
இறைவர் தொக்கு அமரர் சூழ, இளவல் தன் உயிரும், வேந்தன்
முறை தரு மகமும், காத்தார்; வட திசை முனியும் சென்றான். 47

'வடா திசை முனியும் நண்ணி, மலர்க் கரம் நாசி வைத்து, ஆங்கு,
இடாவு பிங்கலையால் நைய, இதயத்தூடு எழுத்து ஒன்று எண்ணி,
விடாது பல் பருவம் நிற்ப, மூல மா முகடு விண்டு,
தடாது இருள் படலை மூட, சலித்தது எத் தலமும், தாவி. 48

'எயில் உரித்தவன் யானை உரித்த நாள்,
பயிலுறுத்து உரி போர்த்த நல் பண்பு என,
புயல் விரித்து எழுந்தாலென, பூதலம்
குயிலுறுத்தி, கொழும் புகை விம்மவே. 49

'தமம் திரண்டு உலகு யாவையும் தாவுற,
நிமிர்ந்த வெங் கதிர்க் கற்றையும் நீங்குற,
கமந்த மாதிரக் காவலர் கண்ணொடும்,
சுமந்த நாகமும், கண் சும்புளித்தவே. 50

'திரிவ நிற்ப செக தலத்து யாவையும்,
வெருவலுற்றன; வெங் கதிர் மீண்டன;
கருவி உற்ற ககனம் எலாம் புகை
உருவி உற்றிட, உம்பர் துளங்கினார். 51

'புண்டரீகனும், புள் திருப் பாகனும்,
குண்டை ஊர்தி, குலிசியும், மற்று உள
அண்டர் தாமும், வந்து, அவ் வயின் எய்தி, வேறு,
எண் தபோதனன் தன்னை எதிர்ந்தனர். 52

'பாதி மா மதி சூடியும், பைந் துழாய்ச் 
சோதியோனும், அத் தூய் மலராளியும்,
"வேத பாரகர், வேறு இலர், நீ அலால்;
மா தபோதன!" என்ன வழங்கினர். 53

'அன்ன வாசகம் கேட்டு உணர் அந்தணன்,
சென்னி தாழ்ந்து, இரு செங் கை மலர் குவித்து,
"உன்னு நல் வினை உற்றது" என்று ஓங்கினான்;
துன்னு தேவர்தம் சூழலுள் போயினார். 54

சதானந்தர் இராம இலக்குவரை வாழ்த்தி தம் இடம் பெயர்தல் 
 
'ஈது முன்னர் நிகழ்ந்தது; இவன் துணை
மா தவத்து உயர் மாண்பு உடையார் இலை;
நீதி வித்தகன் தன் அருள் நேர்ந்தனிர்;
யாது உமக்கு அரிது?' என்றனன், ஈறு இலான். 55

என்று கோதமன் காதலன் கூறிட,
வென்றி வீரர் வியப்பொடு உவந்து எழா,
ஒன்று மா தவன் தாள் தொழுது ஓங்கிய
பின்றை, ஏத்திப் பெய்ர்ந்தனன், தன் இடம். 56

இராமன் சீதை நினைவாய் இருத்தல் 
 
முனியும் தம்பியும் போய், முறையால் தமக்கு
இனிய பள்ளிகள் எய்தியபின், இருட்
கனியும் போல்பவன், கங்குலும், திங்களும்,
தனியும், தானும், அத் தையலும், ஆயினான். 57

சீதையின் உருவெளிப்பாடு 
 
'விண்ணின் நீங்கிய மின் உரு, இம் முறை,
பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?
எண்ணின், ஈது அலது என்று அறியேன்; இரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால். 58

வள்ளல் சேக்கைக் கரியவன் வைகுறும்
வெள்ளப் பாற்கடல்போல் மிளிர் கண்ணினாள்,
அள்ளல் பூமகள் ஆகும்கொலோ-எனது
உள்ளத் தாமரையுள் உறைகின்றதே? 59

அருள் இலாள் எனினும், மனத்து ஆசையால்,
வெருளும் நோய் விடக் கண்ணின் விழுங்கலால்,
தெருள் இலா உலகில், சென்று, நின்று, வாழ்
பொருள் எலாம், அவள் பொன் உரு ஆயவே! 60

'பூண் உலாவிய பொற் கலசங்கள் என்
ஏண் இல் ஆகத்து எழுதலஎன்னினும்;
வாள் நிலா முறுவல் கனி வாய் மதி
காணல் ஆவது ஒர் காலம் உண்டாம்கொலோ? 61

'வண்ண மேகலைத் தேர் ஒன்று, வாள் நெடுங்
கண் இரண்டு, கதிர் முலைதாம் இரண்டு,
உண்ண வந்த நகையும் என்று ஒன்று உண்டால்;
எண்ணும் கூற்றினுக்கு இத்தனை வேண்டுமோ? 62

'கன்னல் வார் சிலை கால் வளைத்தே மதன்,
பொன்னை முன்னிய பூங் கணை மாரியால்,
என்னை எய்து தொலைக்கும் என்றால், இனி,
வன்மை என்னும் இது ஆரிடை வைகுமே? 63

'கொள்ளை கொள்ளக் கொதித்து எழு பாற்கடல்
பள்ள வெள்ளம் எனப் படரும் நிலா,
உள்ள உள்ள உயிரைத் துருவிட,
வெள்ளை வண்ண விடமும் உண்டாம்கொலோ? 64

'ஆகும் நல்வழி; அல்வழி என் மனம்
ஆகுமோ? இதற்கு ஆகிய காரணம்,
பாகுபோல் மொழிப் பைந்தொடி, கன்னியே
ஆகும்; வேறு இதற்கு ஐயுறவு இல்லையே!' 65

திங்களின் மறைவும், நிலா ஒளி மழுங்கலும் 
 
கழிந்த கங்குல் அரசன் கதிர்க் குடை
விழுந்தது என்னவும், மேல் திசையாள் சுடர்க்
கொழுந்து சேர் நுதற் கோது அறு சுட்டி போய்
அழிந்தது என்னவும், ஆழ்ந்தது-திங்களே. 66

வீசுகின்ற நிலாச் சுடர் வீந்ததால்-
ஈசன் ஆம் மதி ஏகலும், சோகத்தால்
பூசு வெண் கலவைப் புனை சாந்தினை
ஆசை மாதர் அழித்தனர் என்னவே. 67

சூரிய உதயமும், ஒளி பரவுதலும் 
 
ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம் மயல் உழந்து, தளரும் ஏல்வை,
சிதையும் மனத்து இடருடைய செங்கமல முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர் முக யானையின் உரிவைப் போர்வை போர்த்த
உதைய கிரி எனும் கடவுள் நுதல் கிழித்த விழியேபோல், உதயம் செய்தான். 68

விசை ஆடல் பசும் புரவிக் குரம் மிதிப்ப உதயகிரி விரிந்த தூளி
பசை ஆக, மறையவர் கைந் நறை மலரும் நிறை புனலும் பரந்து பாய,
அசையாத நெடு வரையின் முகடுதொறும் இளங் கதிர் சென்று அளைந்து, வெய்யோன்,
திசை ஆளும் மத கரியைச் சிந்தூரம் அப்பியபோல் சிவந்த மாதோ! 69

பண்டு வரும் குறி பகர்ந்து, பாசறையின், பொருள் வயினின், பிரிந்து போன
வண்டு தொடர் நறுந் தெரியல் உயிர் அனைய கொழுநர் வர மணித் தேரோடும்,
கண்டு மனம் களி சிறப்ப, ஒளி சிறந்து, மெலிவு அகலும் கற்பினார்போல்,
புண்டரிகம் முகம் மலர, அகம் மலர்ந்து பொலிந்தன-பூம் பொய்கை எல்லாம். 70

எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள் இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும், கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தாலென விரிந்த - கதிர்கள் எல்லாம். 71

இராமன் துயில் நீத்து எழுதல் 
 
கொல் ஆழி நீத்து, அங்கு ஓர் குனி வயிரச் சிலைத் தடக் கைக் கொண்ட கொண்டல்,
எல் ஆழித் தேர் இரவி இளங் கரத்தால் அடி வருடி அனந்தல் தீர்ப்ப, 
அல் ஆழிக் கரை கண்டான் - ஆயிர வாய் மணி விளக்கம் அழலும் சேக்கைத்
தொல் ஆழித் துயிலாதே, துயர் ஆழி-நெடுங் கடலுள் துயில்கின்றானே. 72

மூவரும் சனகனது வேள்விச் சாலை சென்று சார்தல் 
 
ஊழி பெயர்ந்தெனக் கங்குல் ஒரு வண்ணம் புடை பெயர, உறக்கம் நீத்த
குழி யானையின் எழுந்து, தொல் நியமத் துறை முடித்து, சுருதி அன்ன
வாழி மாதவற் பணிந்து, மனக்கு இனிய தம்பியொடும், வம்பின் மாலை
தாழும் மா மணி மௌலித் தார்ச் சனகன் பெரு வேள்விச் சாலை சார்ந்தான். 73

மிகைப் பாடல்கள் 
 
நின்றனன் அரசன் என்றான்; நீ எனைக் கொண்டு போகை
நன்று என மொழிந்து நின்றான், நல்கிய தாயை நோக்கி,
'இன்று எனகி கொடுத்தியோ?' என்று இறைஞ்சினன் கசிந்து நின்றான்;
தன் துணை மார்பில் சேர்த்துத் தழுவலும், அவனை நோக்கி. 39-1

'என்று கூறி, இமையவர் தங்கள் முன் 
வன் தபோத வதிட்டன் வந்து, என்னையே,
"நின்ற அந்தணனே" என நேர்ந்தவன்,
வென்றி வெந் திறல் தேவர் வியப்புற. 53-1

காதலால் ஒருத்தியை நினைப்ப, கண் துயில்
மாதராள் அவன் திறம் மறுப்ப, கங்குல் மான்,
'ஏதிலான் தமியன்' என்று, 'ஏகலேன்' என,
ஆதலால் இருந்தனன்; அளியன் என் செய்வான்? 61-1

 

 


 

கம்பராமாயணம்

Tamil Editor
Chapters
கம்பராமாயணம் (ராமாவதாரம்) ஆற்றுப் படலம் நாட்டுப் படலம் நகரப் படலம் அரசியற் படலம் திரு அவதாரப் படலம் கையடைப் படலம் தாடகை வதைப் படலம் வேள்விப் படலம் அகலிகைப் படலம் மிதிலைக் காட்சிப் படலம் கைக்கிளைப் படலம் வரலாற்றுப் படலம் கார்முகப் படலம் எழுச்சிப் படலம் சந்திரசயிலப் படலம் வரைக்காட்சிப் படலம் பூக் கொய் படலம் நீர் விளையாட்டுப் படலம் உண்டாட்டுப் படலம் எதிர்கொள் படலம் உலாவியற் படலம் கோலம் காண் படலம் கடிமணப் படலம் பரசுராமப் படலம் மந்திரப் படலம் மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்ச்சிப் படலம் நகர் நீங்கு படலம் தைலம் ஆட்டு படலம் கங்கைப் படலம் குகப் படலம் வனம் புகு படலம்