Get it on Google Play
Download on the App Store

வரலாற்றுப் படலம்

 

 

←11. கைக்கிளைப் படலம்

கம்பராமாயணம்  ஆசிரியர் கம்பர்பாலகாண்டம்

13. கார்முகப் படலம்→

 

 

 

 

 


901கம்பராமாயணம் — பாலகாண்டம்கம்பர்


12. வரலாற்றுப் படலம்


முனிவர்கள் ஏனையோர் சூழ சனகன் வீற்றிருத்தல்

 
முடிச் சனகர் பெருமானும், முறையாலே பெரு வேள்வி முற்றி, சுற்றும்
இடிக் குரலின் முரச இயம்ப, இந்திரன் போல், சந்திரன் தோய், கோயில் எய்தி,
எடுத்த மணி மண்டபத்துள், எண்தவத்து முனிவரொடும்,இருந்தான்-பைந் தார்
வடித்த குனி வரி சிலைக் கைம் மைந்தனும்,தம்பியும்,மருங்கின் இருப்ப மாதோ.1

சனகன்இராமஇலக்குவரைப்பற்றி வினவ,முனிவர் அவ்விருவரைப்பற்றிக் கூறல்

 
இருந்த குலக் குமரர்தமை, இரு கண்ணின் முகந்து அழகு பருக நோக்கி,
அருந் தவனை அடி வணங்கி, 'யாரை இவர்? உரைத்திடுமின், அடிகள்!' என்ன,
'விருந்தினர்கள்; நின்னுடைய வேள்வி காணிய வந்தார்; வில்லும் காண்பார்;
பெருந் தகைமைத் தயரதன் தன் புதல்வர்' என, அவர் தகைமை பேசலுற்றான்: 2

இராம இலக்குவரின் குல மரபை முனிவன் முற்பட எடுத்துரைத்தல்

 
'ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்?
பேதித்த உயிர் அனைத்தும் பெரும் பசியால் வருந்தாமல்,
சோதித் தன்வரி சிலையால் நிலமடந்தை முலை சுரப்ப,
சாதித்த பெருந் தகையும், இவர் குலத்து ஓர் தராபதிகாண்! 3

'பிணி அரங்க, வினை அகல, பெருங் காலம் தவம் பேணி, -
மணி அரங்கு நெடு முடியாய்!-மலர் அயனே வழிபட்டு,
பணி அரங்கப் பெரும் பாயற் பரஞ் சுடரை யாம் காண,
அணி அரங்கம் தந்தானை அறியாதார் அறியாதார்! 4

தான், தனக்கு வெலற்கு அரிய தானவரை, "தலை துமித்து, என்
வான் தரக்கிற்றிகொல்?" என்று குறை இரப்ப, வரம் கொடுத்து, ஆங்கு
ஏன்று எடுத்த சிலையினன் ஆய், இகல் புரிந்த இவர் குலத்து ஓர்
தோன்றலை, பண்டு, இந்திரன்காண், விடை ஏறாய்ச் சுமந்தானும். 5

அரைசன் அவன் பின்னோரை, என்னாலும் அளப்பு அரிதால்;
உரை குறுக நிமிர் கீர்த்தி இவர் குலத்தோன் ஒருவன்காண் -
நரை திரை மூப்பு இவை மாற்றி இந்திரனும் நந்தாமல்,
குரை கடலை நெடு வரையால் கடைந்து, அமுது கொடுத்தானும். 6

கருதல் அரும் பெருங் குணத்தோர், இவர் முதலோர் கணக்கு இறந்தோர்;
திரி புவனம் முழுது ஆண்டு சுடர் நேமி செல நின்றோர்;-
பொருது உறை சேர் வேலினாய்!-புலிப் போத்தும் புல்வாயும்
ஒரு துறையில் நீர் உண்ண, உலகு ஆண்டான் உளன் ஒருவன். 7

மறை மன்னும் மணிமுடியும் ஆரமும் வாளொடு மின்ன, 
பொறை மன்னு வானவரும் தானவரும் பொரும் ஒரு நாள்;-
விறல் மன்னர் தொழு கழலாய்! - இவர் குலத்தோன், வில் பிடித்த
அறம் என்ன, ஒரு தனியே திரிந்து, அமராபதி கரத்தோன். 8

இன் உயிர்க்கும் இன் உயிராய் இரு நிலம் காத்தார் என்று
பொன் உயிர்க்கும் கழலவரை யாம் போலும், புகழ்கிற்பாம்?-
மின் உயிர்க்கும் நெடு வேலாய்! - இவர் குலத்தோன், மென் புறவின்
மன் உயிர்க்கு, தன் உயிரை மாறாக வழங்கினனால்! 9

இடறு ஓட்ட, இன நெடிய வரை உருட்டி, இவ் உலகம்
திடல், தோட்டம், எனக் கிடந்தது என இரங்கி,-தெவ் வேந்தர் -
உடல் தோட்ட நெடு வேலாய்!-இவர் குலத்தோர், உவரி நீர்க்
கடல் தோட்டார் எனின், வேறு ஓர் கட்டுரையும் வேண்டுமோ? 10

'தூ நின்ற சுடர் வேலாய்! அனந்தனுக்கும் சொலற்கு அரிதேல்,
யான் இன்று புகழ்ந்துரைத்தற்கு எளிதோ? ஏடு அவிழ் கொன்றைப்
பூ நின்ற மவுலியையும் புக்கு அளைந்த புனற் கங்கை,
வான் நின்று கொணர்ந்தானும், இவர் குலத்து ஓர் மன்னவன்காண்! 11

கயற் கடல் சூழ் உலகு எல்லாம் கைந் நெல்லிக் கனி ஆக்கி,
இயற்கை நெறி முறையாலே இந்திரற்கும் இடர் இயற்றி,-
முயற் கறை இல் மதிக் குடையாய்! - இவர் குலத்தோன் முன் ஒருவன்,
செயற்கு அரிய பெரு வேள்வி ஒரு நூறும் செய்து அமைத்தான். 12

சந்திரனை வென்றானும், உருத்திரனைச் சாய்த்தானும்,
துந்து எனும் தானவனைச் சுடு சரத்தால் துணித்தானும், 
வந்த குலத்திடை வந்த ரகு என்பான், வரி சிலையால்,
இந்திரனை வென்று, திசை இரு - நான்கும் செரு வென்றான். 13

வில் என்னும் நெடு வரையால் வேந்து என்னும் கடல் கலக்கி,
எல் என்னும் மணி முறுவல் இந்துமதி எனும் திருவை,
அல் என்னும் திரு நிறத்த அரி என்ன, - அயன் என்பான் -
மல் என்னும் திரள் புயத்துக்கு அணி என்ன வைத்தானே! 14

தயரதன் மகப்பேறு பெற்ற வரலாற்றை முனிவன் உரைத்தல்

 
அயன் புதல்வன் தயரதனை அறியாதார் இல்லை; அவன்
பயந்த குலக் குமரர் இவர் தமக்கு உள்ள பரிசு எல்லாம்
நயந்து உரைத்துக் கரை ஏறல் நான்முகற்கும் அரிது ஆம்;-பல்
இயம் துவைத்த கடைத் தலையாய்!-யான் அறிந்தபடி கேளாய்: 15

துனி இன்றி உயிர் செல்ல, சுடர் ஆழிப் படை வெய்யோன்
பனி வென்றபடி என்ன, பகை வென்று படி காப்போன்,
தனு அன்றித் துணை இல்லான், தருமத்தின் கவசத்தான்,
மனு வென்ற நீதியான், மகவு இன்றி வருந்துவான்; 16

சிலைக் கோட்டு நுதல், குதலைச் செங் கனி வாய், கரு நெடுங் கண்,
விலைக்கு ஓட்டும் பேர் அல்குல், மின் நுடங்கும் இடையாரை,
"முலைக் கோட்டு விலங்கு" என்று, தொடர்ந்து அணுகி முன் நின்ற 
கலைக் கோட்டுப் பெயர் முனியால், துயர் நீங்கக் கருதினான்; 17

'"தார் காத்த நறுங் குஞ்சித் தனயர்கள், என் தவம் இன்மை,
வார் காத்த வன முலையார் மணி வயிறு வாய்த்திலரால்,
நீர் காத்த கடல் புடை சூழ் நிலம் காத்தேன்; என்னின் பின்,
பார் காத்தற்கு உரியாரைப் பணி, நீ" என்று அடி பணிந்தான். 18

அவ் உரை கேட்டு, அம் முனியும், அருள் சுரந்த உவகையன் ஆய்,
"இவ் உலகம் அன்றியே, எவ் உலகும் இனிது அளிக்கும்
செவ்வி இளஞ் சிறுவர்களைத் தருகின்றேன்; இனித் தேவர்
வவ்வி நுகர் பெரு வேள்விக்கு உரிய எலாம் வருக" என்றான். 19

காதலரைத் தரும் வேள்விக்கு உரிய எலாம் கடிது அமைப்ப,
மா தவரில் பெரியோனும், மற்றதனை முற்றுவித்தான்;
சோதி மணிப் பொற் கலத்துச் சுதை அனைய வெண் சோறு, ஓர்
பூத கணத்து அரசு ஏந்தி, அனல் நின்றும் போந்ததால். 20

'பொன்னின் மணிப் பரிகலத்தில் புறப்பட்ட இன் அமுதை,
பன்னு மறைப் பொருள் உணர்ந்த பெரியோன் தன் பணியினால்,
தன் அனைய நிறை குணத்துத் தசரதனும், வரன்முறையால்,
நல் நுதலார் மூவருக்கும், நாலு கூறிட்டு, அளித்தான். 21

விரிந்திடு தீவினை செய்த வெவ்விய தீவினையாலும்,
அருங் கடை இல் மறை அறைந்த அறம் செய்த அறத்தாலும்,
இருங் கடகக் கரதலத்து இவ் எழுத அரிய திருமேனிக்
கருங்கடலைச் செங் கனி வாய்க் கவுசலை என்பாள் பயந்தாள். 22

'தள்ள அரிய பெரு நீதித் தனி ஆறு புக மண்டும்
பள்ளம் எனும் தகையானை, பரதன் எனும் பெயரானை,
எள்ள அரிய குணத்தாலும் எழிலாலும் இவ் இருந்த
வள்ளலையே அனையானை, கேகயர்கோன் மகள் பயந்தாள். 23

அரு வலிய திறலினர் ஆய், அறம் கெடுக்கும் விறல் அரக்கர்
வெருவரு திண் திறலார்கள், வில் ஏந்திம் எனில் செம் பொன்
பரு வரையும், நெடு வெள்ளிப் பருப்பதமும் போல்வார்கள்,
இருவரையும், இவ் இருவர்க்கு இளையாளும் ஈன்று எடுத்தாள். 24

தசரத குமாரர்கள் வளர்ந்து, கல்வி கற்ற வரலாறு

 
'தலை ஆய பேர் உணர்வின் கலைமகட்குத் தலைவர் ஆய்,
சிலை ஆயும் தனு வேதம் தெவ்வரைப்போல் பணி செய்ய,
கலை ஆழிக் கதிர்த் திங்கள் உதயத்தில் கலித்து ஓங்கும்
அலை ஆழி என வளர்த்தார் - மறை நான்கும் அனையார்கள். 25

'திறையோடும் அரசு இறைஞ்சும் செறி கழற் கால் தசரதன் ஆம்
பொறையோடும் தொடர் மனத்தான் புதல்வர் எனும் பெயரேகாண்!-
உறை ஓடும் நெடு வேலாய்!-உபநயன விதி முடித்து,
மறை ஓதுவித்து, இவரை வளர்த்தானும் வசிட்டன்காண். 26

இராம இலக்குவர் வேள்வி காத்த திறம் பற்றி முனிவன் கூறுதல்

 
'ஈங்கு, இவரால், என் வேள்விக்கு இடையூறு கடிது இயற்றும்
தீங்குடைய கொடியோரைக் கொல்விக்கும் சிந்தையன் ஆய்
பூங் கழலார்க் கொண்டுபோய் வனம் புக்கேன், புகாமுன்னம்,
தாங்க அரிய பேர் ஆற்றல் தாடகையே தலைப்பட்டாள். 27

'அலை உருவக் கடல் உருவத்து ஆண் தகைதன் நீண்டு உயர்ந்த
நிலை உருவப் புய வலியை நீ உருவ நோக்கு ஐயா!
உலை உருவக் கனல் உமிழ் கண் தாடகைதன் உரம் உருவி,
மலை உருவி, மரம் உருவி, மண் உருவிற்று, ஒரு வாளி! 28

'செக்கர் நிறத்து எரி குஞ்சிச் சிரக் குவைகள் பொருப்பு என்ன
உக்கனவோ முடிவு இல்லை; ஓர் அம்பினொடும், அரக்கி
மக்களில், அங்கு ஒருவன் போய் வான் புக்கான்; மற்றையவன்
புக்க இடம் அறிந்திலேன்; போந்தனென், என் வினை முடித்தே. 29

இராமனது வில்லாற்றலை பற்றி முனிவன் வியந்து பேசுதல்

 
ஆய்ந்து ஏற உணர்-ஐய!-அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவின், உலகு அனைத்தும் கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் படைக் கலங்கள், செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க, இவற்கு ஏவல் செய்குனவால். 30

அகலிகைக்கு உரு அளித்த இராமனது பாத மகிமையைப் போற்றுதல்

 
'கோதமன் தன் பன்னிக்கு முன்னை உருக் கொடுத்தது, இவன்,
போது வென்றது எனப் பொலிந்த, பொலங் கழற் கால் பொடி கண்டாய்;
காதல் என் தன் உயிர்மேலும் இக் கரியோன்பால் உண்டால்;
ஈது, இவன் தன் வரலாறும், புய வலியும்' என உரைத்தான். 31

மிகைப் பாடல்கள்

 
அந்தரத்தில் உருள் சேர, அடு சனி வந்து உறும் அளவில்,
சிந்தை மகிழ் தசரதனும் சென்று அவன்மேல் சரங்கள் தொடுத்து,
'இந்த வழி போகு அரிது' என்று இயைந்தவனை எந்நாளும்
உந்தும் என உலகுதனக்கு உறுதுயர் தீர்ந்திடும் உரவோன். 15-1

'கோதமன் தன் மனைக்கிழத்திக்கு உரைத்த கொடுஞ் சாபம் எனும்
ஓத அருங் கல் உருத் தவிர்த்து, முன்னை உருக் கொடுத்தது இவன்
பாதமிசைத் துவண்டு எழுந்த பசும் பொடி மற்று அது கண்டாய்;
ஈது இவன் தன் அருள் வடிவும் வரலாறும்' என உரைத்தான். 31-1

 

 


 

கம்பராமாயணம்

Tamil Editor
Chapters
கம்பராமாயணம் (ராமாவதாரம்) ஆற்றுப் படலம் நாட்டுப் படலம் நகரப் படலம் அரசியற் படலம் திரு அவதாரப் படலம் கையடைப் படலம் தாடகை வதைப் படலம் வேள்விப் படலம் அகலிகைப் படலம் மிதிலைக் காட்சிப் படலம் கைக்கிளைப் படலம் வரலாற்றுப் படலம் கார்முகப் படலம் எழுச்சிப் படலம் சந்திரசயிலப் படலம் வரைக்காட்சிப் படலம் பூக் கொய் படலம் நீர் விளையாட்டுப் படலம் உண்டாட்டுப் படலம் எதிர்கொள் படலம் உலாவியற் படலம் கோலம் காண் படலம் கடிமணப் படலம் பரசுராமப் படலம் மந்திரப் படலம் மந்தரை சூழ்ச்சிப் படலம் கைகேயி சூழ்ச்சிப் படலம் நகர் நீங்கு படலம் தைலம் ஆட்டு படலம் கங்கைப் படலம் குகப் படலம் வனம் புகு படலம்