லட்சுமியின் ஜெயம்
விஷ்ணுவின் மனதில் ஒருமுறை அவர் தான் அனைத்து உலகையும் காப்பவர் என்ற கர்வம் ஏற்பட்டது. ஒருமுறை அவர் தனது மனைவி லட்சுமியிடம் கூறினார் - "தேவி! அனைத்து லோகபாலகர்களும், திக்பாலகர்களும் எனக்குக் கட்டுப்பட்டவர்கள். அனைத்து உயிரினங்களையும் நானே பாதுகாக்கிறேன். என் பக்தர்கள் ஒருபோதும் உன் மாயையில் சிக்குவதில்லை."
அதைக் கேட்ட லட்சுமி சொன்னாள் - "இது வெறும் மாயை. அனைத்து உலகிற்கும் உண்மையான உரிமையாளரும், மூலமும் நானே. எனது கருணையால்தான் யாருடைய பெருமையும், சிறுமையும் இருக்கிறது. என் கருணை யாருக்கு இருக்கிறதோ, அவர்களைத்தான் அனைவரும் மதிக்கிறார்கள். வேண்டுமென்றால் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்."
விஷ்ணு அந்த சவாலை ஏற்றுக்கொண்டு, இருவரும் மனித உலகில் யோகி மற்றும் யோகினி வேடத்தில் புறப்பட்டனர். ஒரு கிராமத்தில் ஒரு வைஷ்ணவ பக்தரான வைசியர் வசித்து வந்தார். அன்று பலத்த காற்று வீசத் தொடங்கியது. முதலில் கல் மழை பெய்ய ஆரம்பித்தது, அதைத் தொடர்ந்து பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது. சாலையில் நடப்பவர்கள் குளிரில் நடுங்கியபடி எங்காவது ஒதுங்க வேண்டியிருந்தது. அதுபோல யோகி வேடம் தரித்து வந்த விஷ்ணு நடுங்கியபடி வைசியரின் வீட்டு வாசலுக்கு வந்தார்.
அந்த வைசிய வைஷ்ணவ பக்தன் யோகியை வீட்டிற்குள் அழைத்து பணிவுடன் சொன்னான் - "யோகிஷ்வர்! இது உங்கள் வீடு. உள்ளே வந்து உங்களுக்கு விருப்பமான அறையில் ஓய்வெடுங்கள். நான் உங்களுக்கு வீட்டை எல்லாம் காட்டுகிறேன்." அந்த யோகி அந்த வைசியருடன் சேர்ந்து வீடு முழுவதும் பார்த்தான். ஒரு மூலையில் ஒரு சிறிய அறை இருந்தது. அதை காண்பித்து சொன்னான் - "எனக்கு இந்த அறை பிடித்துள்ளது. நான் இங்கே தங்குகிறேன்."
"யோகிஷ்வர்! இதில் நாங்கள் வீட்டில் உபயோகமில்லாத பொருட்களை வைத்திருக்கிறோம். இந்த குப்பைக் கிடங்கில் உங்களை எப்படி தங்க வைப்பது?" என்று வைசியர் சொன்னார். "நாங்கள் யோகிகள், எங்களுக்கு தனிமை வேண்டும்." என்று யோகி சொன்னார். கடைசியில் வேறு வழியின்றி வைசியர் அந்த அறையை காலி செய்து யோகியின் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். யோகி உள்ளே சென்று கதவை உள் தாழிட்டுக் கொண்டார். அப்போது விஷ்ணுவின் மனதில் தோன்றியது - "என் பக்தன் எனக்கு அடைக்கலம் கொடுத்தான், ஆனால் பாவம் லட்சுமி என்ன ஆவாளோ யாருக்குத் தெரியும்? அவளுக்கு யார் அடைக்கலம் கொடுப்பார்கள்? அவள் நிச்சயமாக தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டும்."
உடனே யோகினி வேடத்தில் லட்சுமி அதே வைசியரின் வீட்டு வாசலில் நடுங்கியபடி வந்து நின்றாள். வைசியர் அவளுடைய அழகையும் வனப்பையும் கண்டு திகைத்துப் போனார். வெளியே வந்து சொன்னார் - "தாயே யோகினி! இந்த கொடிய குளிரில் இப்படி வெளியில் ஏன் சுற்றுகிறீர்கள்? உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் என் வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுங்கள்!"
யோகினி வீட்டிற்குள் வந்து சொன்னாள் - "எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது." வைஷ்ணவ பக்தரான வைசியர் வேலைக்காரன் மூலம் அவளுக்கு தண்ணீர் வரவழைத்துக் கொடுத்தார். அந்த யோகினி அந்த தண்ணீரை தனது பையிலிருந்து ஒரு தங்க ரத்தினம் பதித்த கிண்ணத்தை எடுத்து அதில் ஊற்றி குடித்துவிட்டு கிண்ணத்தை வெளியே எறிந்துவிட்டு சொன்னாள் - "எனக்கு இன்னும் தண்ணீர் வேண்டும்." வைசியர் ஆச்சரியத்துடன் கேட்கலானார் - "தாயே யோகினி! அந்த தங்க கிண்ணத்தை ஏன் தூக்கி எறிந்தீர்கள்?" யோகினி சொன்னாள் - "நாங்கள் ஒரு முறை வாய் வைத்து எந்த கிண்ணத்தில் தண்ணீர் குடிக்கிறோமோ அந்த கிண்ணத்தை மீண்டும் வாயில் வைக்க மாட்டோம். இன்னும் தண்ணீர் வரவழையுங்கள்."
இப்படி யோகினி நான்கு ஐந்து கிண்ணங்கள் தண்ணீர் குடித்துவிட்டு தூக்கி எறிந்தாள். அதை எல்லாம் பார்த்து வைசியர் மிகவும் ஆச்சரியப்பட்டார். வைசியரின் மனைவி மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டாள். அவர் யோசித்தார் இந்த யோகினி நம்மை திருமணம் செய்து நம் மனைவியாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவரிடம் சொன்னார் - "தாயே யோகினி! உங்கள் உடைகள் எல்லாம் நனைந்து ஈரமாகிவிட்டது. உடைகளை மாற்றி சாப்பிட்டுவிட்டு பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஓய்வெடுங்கள். இந்த வீட்டை உங்கள் வீடாகவே நினைத்து உங்களுக்கு எந்த அறை பிடிக்கிறதோ அந்த அறையில் சந்தோஷமாக எத்தனை நாள் வேண்டுமானாலும் இருங்கள்."
அந்த வைசியருடன் யோகினி அவருடைய வீடு முழுவதும் பார்த்தாள். யோகி தங்கியிருந்த அறை அருகே நின்று சொன்னாள் - "இந்த அறை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்! இதுவே நான் தங்குவதற்கு ஏற்றது." "ஆனால் தாயே யோகினி! இந்த அறை உங்களுக்கு ஏற்றது அல்ல. இதைத் தவிர இந்த அறையில் சிறிது நேரத்திற்கு முன்புதான் ஒரு யோகி தங்கியிருக்கிறார். அதனால் நீங்கள் வேறு அறை பார்த்துக்கொள்ளுங்கள்." ஆனால் யோகினி அதே அறையில் இருக்க வேண்டும் என்று அடம்பிடித்தாள். அதனால் வைசியர் கதவின் தாழ்பாளை வெளியே தட்டி சொன்னார் - "யோகிராஜ்! நீங்கள் இந்த அறையை காலி செய்துவிட்டு வேறு அறைக்கு செல்லுங்கள்."
"நான் இப்போது யோகாசனங்கள் செய்து கொண்டிருக்கிறேன். இடத்தை விட்டு நகர முடியாது. நான் இந்த அறையில்தான் இருப்பேன்." என்று யோகி உள்ளிருந்து பதில் அளித்தார். வைசியர் யோகினியை வேறு அறையில் தங்குவதற்கு வற்புறுத்தினார். ஆனால் அவள் அதே அறையில் இருக்க வேண்டும் என்று அடம்பிடித்தாள். அதனால் வைசியர் மீண்டும் கதவின் தாழ்பாளை தட்டி பணிவுடன் யோகியை வேறு அறைக்கு போகச் சொன்னார். ஆனால் யோகி அதற்கு மறுத்துவிட்டார். அப்போது வைசியருக்கு கோபம் வந்தது. அவர் தனது வேலைக்காரர்களை அழைத்து கதவை உடைத்து வெளியே இழுக்க சொன்னார்.
வைசியரின் வேலைக்காரர்கள் யோகியை கையைப் பிடித்து வெளியே இழுக்க ஆரம்பித்ததைப் பார்த்த யோகினி சிரிக்க ஆரம்பித்தாள். பிறகு அவள் வைசியரிடம் சொன்னாள் - "நீங்கள் போய் எனக்கு சாப்பாடு எடுத்து வாருங்கள்." வைசியர் சமையலறைக்கு சென்று யோகினிக்கு சாப்பாடு தயார் செய்யத் தொடங்கினார். வைசியர் போனதும் யோகினி அறைக்கு வெளியே வந்து யோகியிடம் சொன்னாள் - "என்னுடைய திறமையை பார்த்தீர்களா? உலகத்தின் மீது யாருக்கு அதிகாரம் இருக்கிறது?" விஷ்ணு பதில் எதுவும் சொல்லவில்லை.
இருவரும் எதுவும் பேசாமல் அல்லது யார் கண்ணிலும் படாமல் வீட்டிற்கு வெளியே வந்து ஒரு கோவிலுக்கு வந்தார்கள். அது விஷ்ணுவின் கோவில். ஒரு ராஜா அதை கட்டினார். அவரது கட்டளைப்படி கோயில் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்படும் அல்லது மூடப்படும். அந்த கோவிலைப் பார்த்த விஷ்ணுவிற்கு லட்சுமியின் பருப்பு இங்கே வேகாது என்று தோன்றியது. இதைத் தவிர அந்த நாட்டின் ராஜாவும், மக்களும் விஷ்ணு பக்தர்கள். யாரும் லட்சுமியை குலதெய்வமாக கருதவில்லை. அதனால் விஷ்ணு லட்சுமியிடம் சொன்னார் - "தேவி! நாம் இங்கே சில நாள் தங்கிவிட்டு போனால் எப்படி இருக்கும்?" "சுவாமி! நான் உங்கள் அடிமை! உங்கள் விருப்பமே என் விருப்பம். ஆனால் இங்கே உங்களுக்கு என்னைவிட அதிக மரியாதை கிடைக்கும் என்று மட்டும் நினைத்துக் கொள்ளாதீர்கள். எப்போதும் ஜெயம் எனக்குதான்." என்று லட்சுமி சொன்னாள்.
இருவரும் கோயிலுக்கு சென்று ஓய்வெடுத்தனர். மறுநாள் காலையில் பூசாரி கோவிலுக்கு வந்து பூஜையை தொடங்கினார். தரிசனம் செய்ய பக்தர்கள் வர ஆரம்பித்தார்கள். அனைவரும் விஷ்ணுவின் ஸ்தோத்திரத்தை சொன்னார்கள். ஒருவர் கூட லட்சுமியின் பெயரை சொல்லவில்லை. விஷ்ணுவின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லாமல் போனது. சரியாக மதியம் ராஜாவுடைய கட்டளைப்படி கோயில் மூடப்பட்டது.
விஷ்ணு லட்சுமியை சீண்டிப் பார்க்க வேண்டுமென்று சொன்னார் - "தேவி! பார்த்தாயா ஒருவர் கூட லட்சுமியின் ஸ்தோத்திரத்தை சொல்லவில்லை. சொல் இப்போது, இந்த உலகத்தின் மீது யாருக்கு அதிகாரம் இருக்கிறது?" விஷ்ணு லட்சுமியிடம் கேட்டார். லட்சுமி சிரித்துக்கொண்டே சொன்னாள் - "இவ்வளவு நேரம் நீங்கள் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து கொஞ்சம் கலைத்துப் போய் இருப்பீர்கள். அதனால் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்."
அதே நேரத்தில் ராஜாவுக்கு பூசாரி சரியான நேரத்தில் கோவிலை திறக்கிறாரா அல்லது மூடிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அவர் ஒரு வியாபாரியின் வேடம் அணிந்து கோவிலுக்கு வந்தார். பூசாரியிடம் சொன்னார் - "ஐயா பட்டர்! நான் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். கோவிலைத் திறங்கள்." "சேட்ஜி, பன்னிரெண்டு மணிக்கு பிறகு கருவறையின் கதவை திறக்க கூடாது என்று ராஜா கட்டளையிட்டுள்ளார். இப்போது மாலை நான்கு மணிக்கு பிறகுதான் தரிசனம் செய்ய முடியும்." என்று பூசாரி வியாபாரியிடம் சொன்னார். "ஐயா பட்டர், ஆனால் அதில் என்ன சட்டம் இருக்கிறது, என்ன ராஜா கட்டளை இருக்கிறது? எனக்கு ரகசியமாக தரிசனம் செய்ய அனுமதியுங்கள். நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன். கடவுளுக்கு அபிஷேகம் செய்வதற்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறேன் நான்! நான் சீக்கிரம் திரும்பிப் போக வேண்டும். கடவுளுக்கு அபிஷேகம் செய்ய ஆயிரம் ரூபாய் கொடுத்த புண்ணிய காரியம் கிடைத்தால் நான் வாழ்க்கையில் வெற்றி அடைவேன்." என்று கூறி வியாபாரி பூசாரியை பார்க்க ஆரம்பித்தார்.
எதிரே வந்த லட்சுமிக்கு முதுகு காட்டுவது நல்லதல்ல என்று பூசாரிக்கு தோன்றியது. இந்த வியாபாரிக்கு தரிசனம் செய்தால் என்ன நஷ்டம்? இது ராஜாவிற்கு எப்படி தெரியும்? இப்படி யோசித்து பூசாரி வியாபாரியிடம் சொன்னார் - "சேட்ஜி! வாருங்கள், உங்களை இப்படி திரும்பி அனுப்ப எனக்கு மனசில்லை. கடவுளுக்கு கோபம் வரும்." வியாபாரி ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக இரண்டாயிரம் ரூபாயை கடவுள் முன் வைத்தார். கடவுளின் காலில் விழுந்து தீர்த்த பிரசாதம் பெற்று அங்கிருந்து கிளம்பினார்.
அரண்மனைக்கு சென்றதும் ராஜா பூசாரியை அழைத்து விசாரித்தார் - "என்ன பட்டர்ஜி? கடவுளுக்கு பூஜை எல்லாம் சரியாக நடக்கிறதா இல்லையா?" "ஆம் மகாராஜா! எல்லாம் ஒழுங்காக நடக்கிறது!" என்று பூசாரி சொன்னார். "ராஜா கட்டளைப்படி குறிப்பிட்ட நேரத்தில் கோயில் திறக்கப்படும் மற்றும் மூடப்படும் நடைமுறை நடந்து கொண்டுதானே இருக்கிறது? இல்லையென்றால் நேரம் கெட்ட நேரத்தில் ஏதாவது சேட் சாவ்கார் வந்துவிட்டால் உடனே கோவிலை திறந்துவிடுவீர்கள்! அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லைதானே?" என்று ராஜா கேட்டார்.
நம்ம ரகசியம் தெரிந்துவிட்டது என்று பூசாரிக்கு சந்தேகம் வந்துவிட்டது. அதனால் கொஞ்சம் நடிப்புடன் சொன்னார் - "குறிப்பிட்ட நேரத்தில்தான் கதவு மூடப்படும் மற்றும் திறக்கப்படும். உதாரணமாக நீங்கள் தனியாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது ராணி வந்துவிட்டால் காவலர்கள் கதவை திறப்பார்களா இல்லையா? அதுபோல லட்சுமி தேவியே கோவிலுக்கு போக வேண்டும் என்று நினைத்துவிட்டால் கதவை திறக்க வேண்டும்தானே!" பூசாரியின் இந்த புத்திசாலித்தனமான பதிலில் சந்தோஷமடைந்து ராஜா அவருக்கு இன்னும் இரண்டாயிரம் ரூபாய் பரிசு கொடுத்து அனுப்பி வைத்தார்.
இப்படி விஷ்ணு லட்சுமியிடம் தோல்வி அடைந்தார். லட்சுமி விஷ்ணுவிடம் சொன்னாள் - "சுவாமி! நீங்கள் என்னுடைய மாயையை முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. இந்த உலகத்தின் ஆரம்பத்திலிருந்து என்னுடைய இந்த அதிகாரம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. தெரிவது மற்றும் தெரியாதது எல்லாமே என்னுடைய கருணையினால்தான் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில் ஆணின் சக்தி பெண்ணே. உங்களிடம் இருக்கும் சக்தி, அதாவது உங்களுடைய லீலை நான் இல்லையா? அதனால் என்னுடைய தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை."