பழிப்பதா? புகழுவதா?
ஒரு முறை ஒரு ராஜாவிடம் பக்கத்து தேசத்திலிருந்து மூன்று சகோதரிகள் வந்தனர். ஒருத்தி நன்றாகப் பாடுவாள். இன்னொருத்தி அருமையாக வாசிப்பாள். மூன்றாமவள் சிறப்பாக நடனம் ஆடுவாள். மூவரும் அவரவர் திறமையை காட்டினார்கள். ஆனால் ராஜா அவர்களைப் பாராட்டவில்லை, பரிசு எதுவும் தரவில்லை. ஆனாலும் அவர்களை தன் விருந்தினர் இல்லத்தில் தங்குமாறு வற்புறுத்தினான். அவர்களும் சம்மதித்தனர். விருந்தினர் இல்லத்தில் ராஜா நியமித்த உளவாளிகள் இருந்தனர்.
விருந்தினர் இல்லத்தில் சேர்ந்தவுடன் மூன்று சகோதரிகளும் ராஜா பற்றி அவரவர் கற்பனைக்கு ஏற்ற மாதிரி குறை கூறினார்கள். ஒருத்தி சொன்னாள் - "இந்த ராஜா ஒரு எரியும் கட்டை மாதிரி!" இன்னொருத்தி சொன்னாள் - "இல்லை, முட்களின் மூட்டை மாதிரி!" மூன்றாமவள் சொன்னாள் - "அது எல்லாம் கிடையாது, ஒரு கல்!"
உளவாளிகள் மூலம் ராஜாவுக்கு அது எல்லாம் தெரிந்தது. ராஜா அவர்களை அரசவைக்கு வரவழைத்து கேட்டான் - "நேற்று விருந்தினர் இல்லத்தில் என்னைப்பற்றி என்ன பேசினீர்களோ, அதை மறுபடியும் சொல்ல முடியுமா?"
முதல் பெண் சொன்னாள் - "மகாராஜா! நான் உங்களை எரியும் கட்டை என்று சொன்னேன். எரியும் கட்டையில் தான் சமையல் நடக்கும். அது ஆறிய பிறகு சாப்பிட முடியும். அதாவது உங்களுடன் பேசும்போது அவசரப்படக்கூடாது."
இரண்டாவது பெண் சொன்னாள் - "மகாராஜா! எனக்கு இது உடன்பாடில்லை! அதனால்தான் நான் உங்களை முட்களின் மூட்டை என்றேன். அதாவது நீங்கள் பலாப்பழம் மாதிரி. முட்கள் நிறைந்த தோலுக்குள் இனிமையான இதயம் இருக்கிறது உங்களுக்கு! மனிதன் பொறுமையுடன் இருக்க வேண்டும்!"
மூன்றாவது பெண் சொன்னாள் - "மகாராஜா! இது கூட எனக்கு சரியா படல. பலாப்பழம் கொஞ்ச நேரம் நல்லா இருக்கும். அதுக்கப்புறம் அழுகிப் போயிடும். ஆனால் கல்கண்டு ரொம்ப நாள் இருக்கும். பார்க்கிறதுக்கு கல்லு மாதிரி இருந்தாலும் அது இனிக்கும். அதனாலதான் நான் உங்களை கல்னு சொன்னேன்."
ராஜா அவர்களின் சமயோசித புத்தியையும், திறமையையும் பார்த்து மூவருக்கும் பரிசு கொடுத்தார்.