ஒரே மாலையின் மணிகள்
ராம்பூரைச் சேர்ந்த ராம் சில முக்கியமான வேலைகளுக்காக சீதாப்பூரைச் சேர்ந்த சீதாராமனைப் பார்க்கப் புறப்பட்டான். லட்சுமணப்பூரை அடையும்போது மதியம் ஆகிவிட்டது. அவனுக்கு மிகவும் பசித்தது. எதிரே தெரிந்த வீட்டின் அருகே நின்றான்.
அந்த வீட்டில் இருந்த அனைவரும் காது கேளாதவர்கள்.
ராம் வெளியில் திண்ணையில் உட்கார்ந்திருந்த இளைஞனிடம், "தம்பி, நான் ஒரு வழிப்போக்கன். உன் வீட்டில் ஏதாவது சாப்பிட கிடைக்குமா என்று உள்ளே போய் விசாரிக்க முடியுமா?" என்று கேட்டான்.
அந்த இளைஞன் வீட்டிற்குள் சென்று தனது சகோதரியை திட்டிக்கொண்டே, "அந்த மனிதன் நீ அவனை திருமணம் செய்ய சம்மதித்துவிட்டாய் என்று சொல்கிறான். இதைப் பற்றி மக்களுக்குத் தெரிந்தால் நமது மரியாதை போய்விடும்" என்று முணுமுணுத்தான்.
கோபத்தில் கொதித்த அவள் தனது தந்தையிடம் சென்று, "அப்பா, இது என்ன அநியாயம்? அண்ணன் எனக்கு சொத்தில் ஒரு பைசா கூட கிடைக்காது என்று சொல்கிறான்! அப்பாவின் சொத்தில் மகளுக்கும் பங்கு உண்டு! அந்த காது கேளாதவனுக்கு சட்டம் தெரியாதா! ஜமீன்தாரிடம் புகார் செய்வேன், அவனை நன்றாக அடிக்கச் செய்வேன்" என்று கூறினாள்.
அவளுடைய தந்தை தனது வேலையை விட்டுவிட்டு, கிணற்றில் தண்ணீர் எடுத்துக் கொண்டிருந்த தனது மனைவியிடம் திரும்பி, "அடி பாவி, உங்க அப்பனுக்கு நான் சமைக்காம பட்டினி போடுவேன் என்று என் மகள்கிட்ட சொல்ல உனக்கு எப்படி தைரியம் வந்தது? உனக்கு ஒழுங்கா சமைக்கத் தெரியாது. காய்கறி விடு, ஆனா உங்க பரம்பரையில யாருக்கும் ஒழுங்கா சாதம் கூட சமைக்கத் தெரியாது! உன்னை கல்யாணம் பண்ணி என்ன பிரயோஜனம், கழுத்துல தூக்கு போட்டுண்ட மாதிரி இருக்கு!" என்று கோபத்தில் கத்தினான்.
உடனே அவனுடைய மனைவி கயிற்றை விட்டுவிட, தண்ணீர் பானை தடார் என்று கிணற்றில் விழுந்தது. தனது கணவனைப் பற்றிக் கவலைப்படாமல், கோபமான காளிமாதா மாதிரி நேராக தனது மாமியாரிடம் சென்று கத்த ஆரம்பித்தாள், "உங்களுக்கு என்னதான் ஆச்சு? அறிவு கெட்டுப் போச்சா? மகன் நாற்பது வயசு ஆச்சு, இன்னும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்களா? பழி வாங்க பாக்குறீங்களா? நான் சும்மா இருக்க மாட்டேன். உங்க பண பலத்த வெச்சு என்ன வேணா செய்ய முடியுமா நீங்க பெரிய ஜமீன்தாரா? இந்த ஊரு என்ன, ஆத்துக்கு அப்பால இருக்கிற ஊர்ல இருக்கிற பெரிய மனுஷங்கள கூட கூட்டிட்டு வர தைரியம் எனக்கு இருக்கு. அவங்க கையால உங்கள அடி வாங்கச் செய்வேன்!" ஆவேசம் வந்தவள் போல் பேசினாள்.
அந்த கிழவி தன் கையிலிருந்த பஞ்சை கீழே போட்டுவிட்டு, "ஆமாம், இப்ப பாரு உன் உண்மை முகம் வெளிய வந்துடுச்சு! நீதான் நிரூபிச்சுட்ட நீ ருத்ரனோட பொண்ணுனு. வீட்ட விட்டு வெளிய போன்னு சொல்றதுக்கு நீ யாரு? இது என் புருஷன் வீடு, இப்ப என் மகன் வீடு, அப்புறம் என் பேரன் வீடு. நல்லா காது குடுத்து கேளு. என் மாமனாரோட கொள்ளு தாத்தா - சூர் தாஸ் - கட்டுன வீடு இது. உயிர் இருக்குற வரைக்கும் இங்கதான் இருப்பேன்! என்ன பண்ணுவன்னு பார்ப்போம்!" என்று சண்டைக்குத் தயாராகிறவள் மாதிரி தனது சேலையை இடுப்பில் கட்டிக்கொண்டாள். கோபத்தில் நடுங்கினாள்.
ஒருவர் பேசுவது மற்றவருக்குப் புரியவில்லை. ஆனால் எல்லோரும் சத்தமாக கத்தி ஒருவரை ஒருவர் திட்ட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அனைவரும் பஞ்சாயத்துக்காக வெளியே வந்தார்கள்.
திண்ணையில் பொறுமையாக உட்கார்ந்து காத்திருந்த ராம், எல்லோரும் வெளியே வருவதைப் பார்த்து சந்தோஷமாக, "ஆஹா! நீங்க எல்லோரும் எவ்வளவு நல்ல மனுஷங்க! வெளியூர்ல இருந்து வந்திருக்கேன்னு இவ்வளவு மரியாதை காட்டுறீங்களே நான் பார்த்ததே இல்ல கேட்டதே இல்ல. விருந்தாளியா இருக்கேன்னு சாப்பிடக் கூப்பிட வந்திருக்கீங்களே! உங்க ஊரு பேரு என்ன சொன்னீங்க? மரியாதைபுரமா? வா, விருந்தாளிகளை கவனிச்சுக்கறதுக்கு சரியான பேருதான்" என்று திண்ணையிலிருந்து சந்தோஷமாக எழுந்தான்.
ஆனால் கோபத்தில் எரிந்த அந்த வீட்டுக்காரர் கத்தினார், "ஏய் யாருடா நீ எங்க வீட்டு விவகாரத்துல தலையிட? நாங்க என்ன வெளியாளுங்களோட சண்ட போடறோமா? நாங்க சொந்தத்துல சண்ட போட்டுப்போம். இல்லாட்டி பிரியமா பேசிப்போம். உனக்கு என்ன உரிமை இருக்கு அழைக்காம வீட்டுக்குள்ள நுழைய? போடா வெளிய. போ உனக்கு வேலைய பாரு!"
அவன் பேசுவதைக் கேட்டு ராம் ஆச்சரியப்பட்டான். பயந்துபோய், "அடப்பாவி! இது என்ன அநியாயம்! ஒருவேளை சாப்பாட்டுக்கு பத்து ரூபாயா? இவ்வளவு பெரிய காசு இருந்தா, எனக்கு பசியே எடுத்திருக்காது, உங்க வீட்டு திண்ணைல உட்கார வேண்டிய நிலமை எனக்கு வந்திருக்காது!" உடனே அவன் அந்தத் தெருவிலிருந்து ஓட்டம் பிடித்தான்.
உண்மை என்னவென்றால், ராம்பூரைச் சேர்ந்த ராம் காது கேளாதவன்! எல்லாரும் ஒரே மாலையின் மணிகள்!