உத்தரவாத கடிதம்
சந்திரன் ஒரு ஏழை இளைஞன். மாயாராம் கடையில் ஒரு வேலை காலியாக இருப்பதாக கேள்விப்பட்டதும், வேலை பற்றி விசாரிக்க அவரிடம் சென்றான்.
மாயாராம் சந்திரனிடம், "எனக்கு ஒரு குமாஸ்தா தேவை என்பது உண்மைதான். ஒவ்வொரு வாரமும் ஒரு முறை நான் பொருட்கள் வாங்க நகரத்திற்கு செல்ல வேண்டும். அன்றைய தினம் நடக்கும் விற்பனைத் தொகை முழுவதும் அன்று குமாஸ்தாவிடம் இருக்கும். இதற்கு முன்பு இரண்டு ஊழியர்கள் எனக்கு துரோகம் செய்துவிட்டார்கள். இப்போது உனக்கு இந்த வேலை வேண்டுமென்றால், ஒரு பாதுகாப்பு தொகையாக ஆயிரம் ரூபாய் என்னிடம் டெபாசிட் செய்ய வேண்டும். அல்லது இரண்டு மூன்று முக்கியமானவர்களின் பரிந்துரைக் கடிதம் வாங்கி அவர்களிடமிருந்து உத்தரவாதக் கடிதம் பெற்று வர வேண்டும்."
மாயாராமின் பேச்சைக் கேட்ட சந்திரன், "நீங்கள் கடையை மூடிய பிறகு என்னுடன் வாருங்கள். நீங்கள் விரும்பும் உத்தரவாதத்தை நான் பெற்றுத் தர முடியும்."
அன்று மாலை சந்திரன் மாயாராமை அழைத்துக்கொண்டு வட்டிக்கு பணம் கொடுக்கும் சியாராமிடம் சென்று ஆயிரம் ரூபாய் கடன் கேட்டான்.
இதைக் கேட்டு கேலியாக சிரித்த சியாராம், "நீ என் வீட்டுக்கு பக்கத்து குடிசையில் தானே வசிக்கிறாய். உன்னை எனக்கு ரொம்ப நாளாக தெரியும். அசலை விடு, என் வட்டியை கூட உன்னால் கட்ட முடியாது. உன்னைப் போன்றவர்களுக்கு கடன் கொடுத்து சிக்கலை வாங்கிக்கொள்ள நான் முட்டாள் இல்லை!"
சந்திரன் மாயாராமிடம், "பாதுகாப்பு பணத்துக்காக நான் செய்த முயற்சி தோல்வியடைந்தது. இப்போது முக்கியமானவர்களிடம் உத்தரவாதம் பெற முயற்சிக்கிறேன்." என்று சொல்லிவிட்டு அவனை அழைத்துக்கொண்டு கிராமத் தலைவர் கங்காராமிடம் சென்றான்.
சந்திரனை ஆச்சரியமாக பார்த்த கங்காராம், "ஓஹோ, உன் பெயர் சந்திரனா? நான் உன்னை பலமுறை பார்த்திருக்கிறேன். மற்ற பிள்ளைகளைப் போல் நீ எந்த கெட்ட வேலையும் செய்வதில்லை என்று என் வேலைக்காரன் சொன்னான். நல்ல பையன் நீ. ஆனால் அதற்காக உனக்கு நான் உத்தரவாதக் கடிதம் எழுதி தர முடியாது."
ஒரு வார்த்தை கூட பேசாமல் சந்திரன் மாயாராமை அழைத்துக்கொண்டு கிராமக் காவல்காரரிடம் சென்றான். நடந்ததை எல்லாம் சொல்லி காவல்காரரிடம் உத்தரவாதக் கடிதம் தரும்படி வேண்டினான்.
காவல்காரன் உறுமிக் கொண்டே பேசினான், "உன்னை என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? என்னிடம் உத்தரவாதக் கடிதம் கேட்க உனக்கு எப்படி தைரியம் வந்தது?" என்று கோபத்தில் ஒரு சிப்பாயை அழைத்து, "இவன் யாரோ பெரிய குற்றவாளியாக இருப்பான், இல்லையா?" என்று கேட்டான்.
அதற்கு அந்த போலீஸ்காரர், "அப்படி இல்லை சார், இவன் வீடு அந்த குளத்தின் பக்கத்தில் இருக்கிறது; அங்குள்ள மக்கள் எல்லோரும் இவன் நல்ல பையன் என்று சொல்கிறார்கள். நீங்கள் நினைப்பது போல் இவன் திருடனோ அல்லது குற்றவாளியோ கிடையாது. ஆனால் பரிதாபகரமாக வேலை இல்லாமல் இருக்கிறான்."
சிப்பாயின் இந்த பேச்சால் காவல்காரன் அமைதியானான். ஆனாலும், "நீ என்ன சொன்னாலும், வேலை இல்லாதவன் ரொம்ப நாள் நல்லவனாக இருக்க முடியாது. சீக்கிரமே திருட ஆரம்பித்து விடுவான். நீ இவன் மீது ஒரு கண் வைத்துக்கொள்." என்று சொல்லிவிட்டு, பிறகு சந்திரனைப் பார்த்து, "சீக்கிரம் இங்கிருந்து போ. நல்லவர்களுக்கு இங்கே இடமில்லை."
சந்திரன் மாயாராமோடு அங்கிருந்து திரும்பி வந்தான். வழியில் அவன், "ஐயா, நான் ஒரு துரதிர்ஷ்டவசமான மனிதன். நான் யாரிடமிருந்தும் உங்களுக்கு உத்தரவாதக் கடிதம் தர முடியாது." என்றான்.
சந்திரனின் இந்தப் பேச்சைக் கேட்டு சிரித்த மாயாராம், "உனக்கு புரியவில்லை. 'வேண்டாம், வேண்டாம்' என்று அந்த மூன்று பேரும் உனக்கு உத்தரவாதக் கடிதம் கொடுத்து விட்டார்கள்; உன் நல்ல குணங்களை பாராட்டி இருக்கிறார்கள். எனக்கு இதைவிட அதிகமாக என்ன வேண்டும்? நீ நாளை முதல் வேலைக்கு வா." என்றான்.