Bookstruck

உண்மையான செல்வம்

ராமப்பூரில் கங்காதர் என்ற ஒரு சிறிய வியாபாரி இருந்தார். அவரது மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். மனைவி மற்றும் புதிதாக பிறந்த குழந்தையை பார்த்துவிட்டு கங்காதர் மாலையில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, தூரத்தில் அவரது வீட்டின் முன் ஒரு வண்டி நிற்பதை பார்த்தான். அது பட்டு திரைச்சீலைகள் வைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது அம்மா அன்னபூர்ணா தானே வண்டி வரை வந்து விருந்தினர்களை வழியனுப்பி வைத்தார். இந்த காட்சியை பார்த்த கங்காதருக்கு ஆச்சரியமாக இருந்தது. 'இவ்வளவு பெரிய பணக்கார விருந்தினர்கள் எப்படி நம் வீட்டிற்கு வந்தார்கள்?' கங்காதர் வீட்டிற்கு வரும்போது வண்டி வெகுதூரம் சென்றுவிட்டது. அம்மா அவரைப் பார்த்ததும், "மருமகள் நல்லா இருக்காங்களா? பையன் எப்படி இருக்கான்?" என்று கேட்டாள். "இருவரும் நன்றாக இருக்கிறார்கள் அம்மா. ஆனால் நம் வீட்டிற்கு யாரோ பெரிய மனிதர்கள் வந்திருந்தாங்களே? வண்டியில் பட்டு திரைச்சீலைகள் எல்லாம் போட்டிருந்தாங்களே? யார் வந்திருந்தார்கள்?" மகனின் இந்த கேள்விக்கு அன்னபூர்ணா திடுக்கிட்டாள். ஆனால் தன்னை சமாளித்துக்கொண்டு, "அந்த ஆட்கள்? அது இரண்டு மூன்று பேர் கிடையாது. ஒரு பெண் வண்டியில் வந்திருந்தா. அவள் என் சிறுவயது தோழி, நலம் விசாரிக்க வந்தாள்." என்றாள். "ஆனால் நீ உன் பணக்கார தோழியைப் பற்றி என்னிடம் சொன்னதே இல்லையே?" ஆச்சரியத்துடன் கங்காதர் கேட்டான். "ஒரு காலத்தில் அவர்கள் குடும்பமும் நடுத்தர வர்க்கம்தான். அதிர்ஷ்டம் அடிச்சது, இப்போது லட்சாதிபதி ஆகிட்டா. உன் அப்பா இறந்த பிறகு நாம் கூட கஷ்டப்பட்டோம் இல்லையா? அதிர்ஷ்டம் எப்படி மாறும்னு யாருக்கும் தெரியாது." அன்னபூர்ணா சமாதானம் செய்தாள். கங்காதருக்கு எட்டு வயதாக இருக்கும்போது அவரது அப்பா இறந்துவிட்டார். குடிசையை சுற்றி இருந்த இடத்தில் நிறைய தென்னை மரங்கள் இருந்தன. கங்காதர் தேங்காய்களை தள்ளுவண்டியில் வைத்து தெருத்தெருவாக சுற்றி விற்றான். அவனது அம்மா மூன்று நான்கு வீடுகளில் வேலை செய்தாள். சிறுவயதிலிருந்தே கங்காதர் அம்மாவுக்கு நிறைய உதவி செய்தான். இப்போது ஒரு நல்ல வீடும் கட்டியிருந்தான். பின் வாசல் கிணற்றில் கால் கழுவிவிட்டு வீட்டிற்குள் வந்த கங்காதர் அம்மாவிடம், "உன் தோழி என்ன பேசினாள்?" என்று கேட்டான். "அவள் சும்மா அரட்டை அடிக்க வரவில்லை! அவளுடைய ஒரே மகனுக்கு திருமணம் நிச்சயம் ஆகி இருக்கு. ஒரு வாரத்தில் முகூர்த்தம் இருக்கு. நாலு நாளைக்கு முன்னாடியே வரச்சொல்லி ரொம்ப வற்புறுத்தினா." அன்னபூர்ணா சொன்னாள். கொஞ்சம் யோசித்துவிட்டு கங்காதர், "அவள் உனக்கு நெருங்கிய தோழியாக இருக்கலாம். ஆனால் மூன்று நான்கு நாட்களுக்கு முன்னாடியே போவது சரியில்லை. நாம் கல்யாணத்துக்கு முதல் நாள் மட்டும் போவோம். சரியா?" என்றான். அன்னபூர்ணாவுக்கு இந்த திட்டம் பிடிக்கவில்லை. ஆனால் சரி என்று தலையசைத்தாள். திருமணத்திற்கு போகும்போது கங்காதரிடம் தான் வாங்கியிருந்த உடையை காட்டி, "நான் இந்த உடையை மாப்பிள்ளைக்காக வாங்கினேன். எப்படி இருக்கு?" என்றாள். கங்காதரின் முகத்தில் வருத்தம் தெரிந்தது. அவன், "நல்லாத்தான் இருக்கு. ஆனால் உன்னை டாக்டரிடம் கூட்டிட்டுப் போய் பரிசோதனை செய்யறதுக்காக நான் எடுத்து வைத்திருந்த காசுலிருந்து ஐநூறு ரூபாய் செலவு பண்ணிட்டே. அதுதான் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு." என்றான். இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம் என்று அன்னபூர்ணா அமைதியாக இருந்தாள். மாலையில் தாயும் மகனும் கல்யாண வீட்டிற்கு போய்ச் சேர்ந்தார்கள். மறுநாள் திருமணம். ஆடம்பரமாக விலையுயர்ந்த உடைகள் அணிந்திருந்த அந்த மக்கள் சாதாரண உடையில் இருந்த இவர்களை கவனிக்கவே இல்லை. இரண்டு மூன்று அறைகளை தாண்டி சென்ற பிறகு அன்னபூர்ணாவுக்கு அவளது தோழி இந்துமதி கண்ணில் பட்டாள். "வாங்க வாங்க!" என்று அன்னபூர்ணாவின் கையை பிடித்தாள். அன்னபூர்ணா, "மாப்பிள்ளை எங்கே?" என்று கேட்டாள். "ஏன் இவ்வளவு அவசரப்படுற? வா காட்டுறேன்." என்று சொல்லிக்கொண்டு இந்துமதி அவர்கள் இருவரையும் தனது பெரிய வீட்டின் பின்பக்கத்திற்கு அழைத்து சென்றாள். அங்கே மாப்பிள்ளை கமல் தனது நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தான். சத்தமாக பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அம்மாவை அங்கே பார்த்ததும் எரிச்சலுடன், "அம்மா, நான் நண்பர்களுடன் இருக்கும்போது வரக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லியிருக்கேன்!" என்றான். அதைக் கேட்டு கொஞ்சம் வருத்தத்துடன் இந்துமதி, "என் தோழி உன்னை பார்க்கணும்னு சொன்னா அதான் கூட்டிட்டு வந்தேன்." என்றாள். "அட போடி லூசு மாதிரி தோழி!" என்று கமல் அன்னபூர்ணா மற்றும் கங்காதரை கேவலமாக பார்த்தான். ஆனால் அவன் பேசியதை பற்றி கவலைப்படாமல் அன்னபூர்ணா அவன் அருகில் போய், "திருமணம் செய்து நூறு வருஷம் சந்தோஷமா இருடா!" என்று அந்த புது உடையை அவன் கையில் கொடுத்தாள். அந்த உடையை கூர்மையாக பார்த்துவிட்டு கமல், "சரியான நேரத்துக்கு துணி எடுத்துட்டு வந்து இருக்கீங்க அத்தை! எங்க வேலைக்காரன் கல்யாணத்துக்கு புது துணி எடுக்கலன்னு புலம்பிட்டு இருந்தான்." என்று உடனே வேலைக்காரனை அழைத்து அந்த உடையை அவனிடம் கொடுத்தான். அன்னபூர்ணாவும் இந்துமதியும் ஒருவரை ஒருவர் பார்த்து தலையை குனிந்து கொண்டனர். அங்கிருந்து அவர்கள் வெளியே வந்துவிட்டார்கள். கங்காதருக்கு அவமானத்தில் கோபம் தலைக்கேறியது! வீதியிலிருந்து இரண்டு சந்து தள்ளி இருந்த ஒரு பெரிய மாளிகையில் திருமணம் தடபுடலாக நடந்தது. மணப்பெண் பார்ப்பதற்கு கொஞ்சம் கூட நல்லா இல்லை. நண்பர்கள் கமலிடம் அவளுடைய அழகைப் பற்றி பேசியபோது, அங்கே இருந்த கங்காதர் மற்றும் அன்னபூர்ணாவை கவனிக்காமல் அவன் சொன்னான், "என்ன பண்ணறது! நான் செய்ற வியாபாரத்துல எனக்கு சந்தோஷம் இல்ல. கடல் வியாபாரத்துக்கு எனக்கு நிறைய பணம் வேணும். இந்த கல்யாணம் மூலமா எனக்கு ஐந்து லட்சம் சீதனம் கிடைக்கும் அதனால நான் பொண்டாட்டி அழகை பத்தி யோசிக்கல. இன்னும் ரெண்டு பேர் பத்து லட்சம் தருவதா சொன்னாங்க. ஆனா அவங்க ரெண்டு பேரும் பார்க்கிறதுக்கு 'ராட்சஷி' மாதிரி இருந்தாங்க அதனால இந்த சம்பந்தம் ஓகே பண்ணினேன்; இது என் துரதிர்ஷ்டம்!" இந்த உளறலை கேட்டு கங்காதர் அதிர்ச்சியடைந்தார்! அன்னபூர்ணாவின் கண்களிலும் கண்ணீர் வந்தது. தாயும் மகனும் அன்றே ஒரு வாடகை வண்டியில் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள். அம்மாவுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, அவ்வப்போது சேலையால் கண்களை துடைத்துக்கொள்வதை பார்த்த கங்காதருக்கு வருத்தமாக இருந்தது. அவன், "அம்மா, கமல் அவமானப்படுத்தினதுனால உனக்கு கஷ்டமா இருக்கா? நாம என்ன பண்ண முடியும்? அவன் ரொம்ப கர்வம் பிடிச்சவன். போதும், இனிமேல் அழாதே." என்றான். ஆனால் அவளால் அழுகையை நிறுத்த முடியவில்லை. அவள், "உனக்கு தெரியுமா, அந்த கமல் யாருன்னு?" "அவன் உன் தோழி இந்துமதி மகன் என்று நீ தானே சொன்ன?" ஆச்சரியமாக கங்காதர் கேட்டான். "இல்லை. அவன் உன் தம்பி! இதுவரைக்கும் இந்த விஷயத்தை உன்கிட்ட இருந்து மறைச்சு வெச்சிருந்தேன்! ஆனா இப்போ சொல்லாம இருக்க முடியல!" என்று உறுதியாக சொன்னாள். கணவர் இறந்த பிறகு அன்னபூர்ணா பக்கத்து வீடுகளில் வேலை செய்ய ஆரம்பித்தாள். அப்போது கங்காதருக்கு எட்டு வயது. அவன் தேங்காய் விற்கும் வேலை செய்ய ஆரம்பித்தான். ஆனால் அவனுக்கும் இளையவன் கமல் இரண்டு வயது பையன். ஒரு நாள் மதியம் இந்துமதி தனது வண்டியில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தாள். வெயில் தாங்காமல் மயங்கிவிட்டாள். அதைப் பார்த்து வண்டிக்காரன் பயந்து அன்னபூர்ணாவின் குடிசை முன்னாடி வண்டியை நிறுத்தினான். அப்போது தேங்காய் விற்றுவிட்டு கங்காதர் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். உடனே தேங்காயை உடைத்து அதில் இருந்த தண்ணீரை இந்துமதியின் முகத்தில் தெளித்தான். அவள் எழுந்ததும் தேங்காய் தண்ணீரையே கொடுத்தான். மாலை வரை அவள் குடிசையில் ஓய்வெடுத்தாள். கங்காதர் அவளுக்கு கடவுள் மாதிரி தெரிஞ்சான். புறப்படுவதற்கு முன் இந்துமதி அன்னபூர்ணாவை தனியாக அழைத்து போய், "உங்க பையன் இன்னைக்கு என் உயிரைக் காப்பாத்தினான். எனக்கு குழந்தை இல்ல அதனால ஒரு பையனை தத்தெடுக்க ஆசைப்படுறேன். நீ எதுவும் தப்பா நினைக்கலேன்னா கங்காதரையே தத்தெடுத்துக்கிறேன். நல்லா யோசிச்சுட்டு நாலு நாள்ல சொல்லு."ன்னு சொல்லி தன்னுடைய பெயர் மற்றும் முகவரியை ஒரு பேப்பரில் எழுதி கொடுத்தாள். "கங்காதர் கொஞ்சம் வளர்ந்திருக்கான். எனக்கு உதவி செய்றான். காசு விஷயத்துலயும் உதவி செய்றான். அவனை தத்து கொடுத்துட்டா எனக்கு கஷ்டம் இன்னும் அதிகமாகும். ஆனா சின்ன பையன் கமலை என்னால நல்லா பார்த்துக்க முடியல. பசங்கள பிரியறதுக்கு மனசு இல்ல. ஆனா இவனை தத்து கொடுத்தா அவனுடைய எதிர்காலம் நல்லா இருக்கும்!" என்று அன்னபூர்ணா யோசிச்சா. மற்றவர்களிடம் 'நாங்க கும்பமேளாவுக்கு போறோம்' என்று சொல்லி கமலை இந்துமதியிடம் ஒப்படைத்தாள்.