உண்மையான அழகற்றவன்
ஜெகநாத் பூரியில் ஜெகன் வசித்து வந்தான். அவனுக்கு வீர், ஷூர் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். சிறுவயதில் கொதித்த தண்ணீரை முகத்தில் ஊற்றியதால் வீரின் முகத்தில் இருந்த தோல் எரிந்து விட்டது. இப்போது முகத்தில் கருப்புத் தழும்புகள் மட்டுமே இருந்ததால் அவன் கொஞ்சம் அழகற்றவனாக காணப்பட்டான். ஆனால் அவனது மனம் மிகவும் தூய்மையானதாகவும் தெளிவானதாகவும் இருந்தது. இளையவன் ஷூரின் குணம் வீரை விட வித்தியாசமாக இருந்தது. தனது அழகான தோற்றத்தை நினைத்து அவன் மிகவும் பெருமைப்பட்டான்.
ஒரு நாள் ஜெகன் ஆடுகளை வயல்களில் கொண்டு போய் ஒரு இடத்தில் நிறுத்தினான். அது கோடை காலம். மரங்களின் சிறிய கிளைகளை வெட்டி, அவற்றின் இலைகளை அகற்றி, வீர் ஆடுகளுக்கு சாப்பிட கொடுத்தான். ஷூரும் அவனுக்கு உதவ ஆரம்பித்தான்.
தனது இரண்டு மகன்களும் வெயிலில் தனக்கு வேலை செய்வதை பார்த்து ஜெகனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அவன் சொன்னான், "வீர், கரையில் பனை மரத்தின் வேர்கள் இருக்கு பார், அத வெட்டிட்டு வா. அதை சுட்டு சாப்பிடலாம்." என்றான்.
சிறிது நேரத்தில் வீர் பனை மரத்தின் வேர்களை வெட்டி எடுத்து வந்தான். அதற்குள் ஷூர் காய்ந்த சருகுகளை எடுத்து அதை சுட ஆரம்பித்தான். அப்பா, பிள்ளை சேர்ந்து அதை சாப்பிடலாம் என்று இருந்தபோது ஊரின் புரோகிதர் தனஞ்ஜெய சாஸ்திரி அங்கு வந்து சேர்ந்தார்.
அவரை வரவேற்று ஜெகன் அன்புடன் விசாரித்தான், "சரியான நேரத்துக்கு வந்தீர்கள். இன்னும் கொஞ்சம் வேர்களை வெட்டிட்டு வரலாமா? வீட்டிற்கு எடுத்து செல்லலாமே?" என்றான்.
"ஆமாம்! என் மனதில் இந்த எண்ணம்தான் இருந்தது. ஆனால் சொல்ல தயக்கமாக இருந்தது. ஆனால் இவ்வளவு கடுமையான வெயிலில் நான் வேறொரு வேலையாக வந்தேன்." என்று சாஸ்திரி சொன்னார்.
"சொல்லுங்க சாஸ்திரிஜி, என்ன வேலை இருக்கு?" ஜெகன் மரியாதையுடன் கேட்டான். "ஜெகன், இந்த ஊரை நம்பித்தான் நான் பிழைப்பு நடத்தி வருகிறேன் என்பது உனக்கு தெரியும். எனக்கு ஒரு பசு தானமாக கிடைத்தது. ஆனால் அதை சாப்பிட வைக்க புல் வேண்டாமா? உன் புரோகிதர் என்ற முறையில் என் பசுமாட்டுக்கு உன் புல் கட்டுகளில் இருந்து புல்லை கேட்கிறேன்." என்று சாஸ்திரி சொன்னார்.
"என்ன வேணும்னாலும் கேட்க உங்களுக்கு உரிமை இருக்கு. பசுவை பராமரிக்க கஷ்டமாக இருந்தா என் பசுமாட்டை என்கிட்ட அனுப்பி வைங்க. என் மற்ற கால்நடைகளை போல நான் அதை நல்லா கவனிச்சுக்குவேன். புல் கட்டை என் பையன்ல ஒருத்தன் உங்க வீட்டுக்கு எடுத்துட்டு வருவான். வாங்க, அந்த மர நிழலில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசலாம்." என்று ஜெகன் அவர்களை மரத்தடிக்கு கூட்டி சென்றான்.
அப்போது பனை மரத்தின் வேர்களை எடுத்துக்கொண்டு ஷூரும் வந்து சொன்னான், "சாஸ்திரிஜி, கோபப்படாதீங்க. உங்களுக்கு தெரியும் நான் ஒரு அழகான இளைஞன் என்று. எனக்கு எப்ப வேணும்னாலும் கல்யாணம் நடக்கும். யார் வேணும்னாலும் அவங்க பொண்ண சந்தோஷமா கொடுப்பாங்க. வீர் என்ன விட பெரியவன். அவன் அழகில்லாதவன் என்று நான் சொல்லக்கூடாது, ஆனா வேற வழி இல்ல! அவனுக்கு கல்யாணம் ஆகாம என் கல்யாணத்தை பத்தி யாரும் யோசிக்க மாட்டாங்க. அதனால என் அண்ணனுக்கு நீங்களே ஒரு நல்ல இடமா பாருங்க! பொண்ணு எப்படி இருந்தா கூட பரவாயில்லை." என்றான்.
ஷூர் பேசியதை கேட்டு வீருக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. ஜெகனும் ஷூரின் மீது கோபப்பட்டான். ஆனால் தனது கோபத்தை அவன் வெளிக்காட்டவில்லை.
பனை மரத்தின் வேர்களை எடுத்தபடி சாஸ்திரி திட்டி சொன்னார், "ஷூர், என்ன பேசிட்டு இருக்க நீ? இப்படி பேசறது தப்பு. அடுத்தவங்க மனசை கஷ்டப்படுத்துறது பாவம். அழகற்றவனாக இருக்கிறதை விட இது ரொம்ப பெரிய தப்பு." மேலும் வீரை திரும்பி பார்த்து அவர் சொன்னார், "வீர், அழகை விட ஒருத்தரோட நல்ல குணம் தான் பெரிய அலங்காரம். உன் நல்ல குணத்தை பார்த்து சந்தோஷப்பட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்க தயாரா இருக்கிற ஒரு நல்ல மனைவி உனக்கு கிடைப்பான்னு நான் நம்புறேன். நீ கோவிந்தபுரத்திற்கு போ, அங்க குடியிருக்கிற கோபிய போய் பாரு. உனக்கு நல்லதே நடக்கும்." என்றார்.
சாஸ்திரிஜியின் வார்த்தைகள் வீரின் மனதில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. சில நாட்கள் கழித்து அவன் கோவிந்தபுரத்திற்கு சென்றான். கோபியின் வீட்டின் முகவரியை கண்டுபிடிக்க அவனுக்கு கஷ்டமா இல்ல. கோபி பூ வியாபாரி. அவன் தன்னோட தோட்டத்துல பல வகை கலர் கலரா பூச்செடிகளை நட்டு அந்த பூக்கள வச்சு வியாபாரம் செஞ்சுட்டு இருந்தான். அந்த ஊர்ல அழகான வீடு கட்டினான். அவனோட மனைவி கங்கா மற்றும் ஒரு பொண்ணு ஜோதி இவங்களுடன் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தான்.
வீரை பார்த்ததும் கோபி பூ வாங்க வந்திருப்பாருன்னு நினைச்சுட்டான். ஆனால் காரணம் தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷமா வரவேற்றான். அவனோட மனைவி மற்றும் பொண்ணுக்கு அறிமுகம் செஞ்சு வச்சான்.
கொஞ்ச நேரம் சும்மா பேசின பிறகு கோபி வீரிடம் சொன்னான், "தம்பி, சில வருஷத்துக்கு முன்னாடி நான் திருடும்போது பிடிபட்டேன், அதனால ஜெயிலுக்கு போனேன். திருடன்ங்கற முத்திரை என் நெத்தியில விழுந்துருச்சு. ஜெயில விட்டு வெளிய வந்த பிறகு எனக்கு உதவி செய்ய யாரும் ரெடியா இல்ல. பசியால வாடிட்டேன். மறுபடியும் திருட முடிவு பண்ணேன். அதே வீட்ல திருடி மறுபடியும் பிடிபட்டேன். அந்த வீட்டுக்காரர் ரொம்ப நல்ல மனுஷன், யோசனை பண்ணி பேசக்கூடியவரு. அவர் என்கிட்ட சொன்னாரு, "யாருமே திருடனா பிறக்குறது இல்ல. சூழ்நிலை காரணமா திருடிருக்க. உனக்கு தண்டனை கொடுத்தா நீ மாறமாட்ட. மறுபடியும் உன்னை ஜெயில்ல அடைக்க நான் தப்பு பண்ண மாட்டேன்." என்று சொன்னாரு. அவரு அவரோட வீட்ல எனக்கு வேலை கொடுத்தாரு. இந்த சம்பவம் நடந்து இரண்டு வருஷம் கழிச்சு நான் திருந்திட்டேன்னு நம்புன பிறகு அவரோட வேலைக்காரியோட பொண்ணு கங்காவ எனக்கு கல்யாணம் பண்ணி கொடுத்தாரு. அதுக்கப்புறம் என் நிலைமை நல்லா மாறிடுச்சு. இப்ப கூட என் பொண்ணு ஜோதிய கல்யாணம் பண்ணிக்க யாரும் ரெடியா இல்ல. ஒரு திருடனோட பொண்ணுன்னு சொல்றாங்க. யாராவது ஒரு திருடன மாப்பிள்ளையா ஏத்துக்க வேணும்." அப்படின்னு கிண்டல் பண்றாங்க.
இதுக்கு வீர் பதில் சொல்றதுக்குள்ள கங்கா சொல்ல ஆரம்பிச்சா, "மனுஷங்களோட குணத்த பாக்கனும், வெறும் அழக பாக்கக்கூடாது. உங்கள பத்தி சாஸ்திரிஜி எல்லாம் சொல்லிட்டாரு. எங்க பொண்ண உங்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்க நாங்க ஆசைப்படுறோம். உங்களுக்கு சம்மதமா?"
வீர் பதில் சொன்னான், "என்னோட முகம் கொஞ்சம் அழகில்லாம இருக்குன்னு எனக்கு தெரியும். உங்க நிலைய பயன்படுத்தி உங்க பொண்ண கஷ்டப்படுத்த நான் விரும்பல. நான் அவள கல்யாணம் பண்ணிக்க முடியாது. எனக்கு ஒரு தம்பி இருக்கான், அவன் உங்க பொண்ணுக்கு தகுதியானவன்." மேலும் இந்த செய்திய அவனோட அப்பாக்கு சொன்னான்.
இந்த செய்திய தெரிஞ்சதும் ஜெகன், அவனோட மனைவி மற்றும் ஷூர் மூணு பேரும் கோவிந்தபுரத்திற்கு வந்தாங்க. ஜோதிய பார்த்த பிறகு ஷூருக்கு அவள பிடிச்சிருந்தது. ஆனா அவனோட அப்பா ஒரு திருடன்னு தெரிஞ்சதும் இந்த கல்யாணத்துக்கு நான் சம்மதிக்க முடியாதுன்னு சொல்லிட்டான். எந்த நிலையிலயும் ஒரு திருடனோட பொண்ண கல்யாணம் பண்ணிக்க அவனுக்கு விருப்பம் இல்ல.
ஷூர் பேசுறத ஜோதி அமைதியா கேட்டுட்டு இருந்தா. மேலும் பொறுமை இழந்து ஷூர்கிட்ட கடுமையா பதில் சொன்னா, "என்ன பேசுறீங்க நீங்க? காக்க குஞ்சும், குயில் குஞ்சும் ஒரே மாதிரிதான் இருக்கும், அதிகம் வித்தியாசம் இருக்காது. ஆனா குயில் தன்னோட இனிமையான குரலால எல்லோருடைய மனசையும் சந்தோஷப்படுத்துது. உங்கள பார்த்தாலே தெரியுது, மனுஷங்களுக்குள்ளயும் காகம் இருக்குன்னு. உங்க அழகான முகத்த பார்த்து எந்த பொண்ணும் உங்கள கல்யாணம் பண்ணிக்குவாங்கன்னு நினைச்சுக்காதீங்க. உங்க எண்ணங்கள் மோசமா இருக்கு, உங்க பேச்சு கடுமையானதா இருக்கு. உங்க அண்ணன் சம்மதிச்சா நான் அவர கல்யாணம் பண்ணிக்கிறேன்." என்று சொன்னா.
ஜோதி பேசினது எல்லோருக்கும் பிடிச்சிருந்தது. ஜெகன் ஷூர நல்லா திட்டுனான், "ஏய், பொண்ணு பிடிக்கலன்னா கூட கொஞ்சமாச்சு பேசுறத கவனிச்சு பேசு. எடுத்தேன் கவிழ்த்தேன்னு பேசாத. தன்னோட வாய அடக்க முடியாதவன் தான் உண்மையான அழகற்றவன். புரிஞ்சுதா?" இன்னும் வீர்கிட்ட திரும்பி, "வீர், ஜோதி உனக்கு பிடிச்சிருக்கா? உனக்கு இந்த சம்பந்தம் பிடிச்சிருக்கா?" என்று கேட்டான்.
வீர் தலைய ஆட்டி சம்மதம் சொன்னான். அப்போ ஜோதியோட அப்பாவும், அம்மாவும் இரண்டு பேரையும் ஆசிர்வாதம் பண்ணாங்க.
வீருக்கும், ஜோதிக்கும் கல்யாணம் நடந்து ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தாங்க.